ஸ்மார்ட்போனை விற்று 1,900 டொலர் ஏமாந்த டொராண்டோ நபர்
கனடா
கனடாவின் டொராண்டோ நகரைச் சேர்ந்த நபர் ஒருவர், ஃபேஸ்புக் மார்க்கெட்பிளேஸ் மூலம் தனது ஸ்மார்ட்போனை விற்பனை செய்து, பதிலுக்கு 1,900 டொலர் மதிப்பிலான போலி பணத்தைப் பெற்று ஏமாற்றப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காகத் தன் அடையாளத்தை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட 'ஜே' என்ற அந்த நபர் இதுகுறித்துக் கூறுகையில், "எனக்கு இந்த அனுபவம் நேரடியாக நேரும் வரை போலி நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. என்னை ஏமாற்றிய நபருக்கு என் முகவரி தெரியும் என்பதால் அச்சமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
ஜே தனது சாம்சங் இசட் போல்ட் 8 ரக ஸ்மார்ட்போனை விற்பனை செய்ய ஃபேஸ்புக் மார்க்கெட்பிளேஸில் பதிவிட்டிருந்தார். அதை 1,900 டாலர் கொடுத்து வாங்கிக் கொள்வதாக ஒருவர் அவரைத் தொடர்புகொண்டார்.
வாங்குபவர் ஜே வசிக்கும் கட்டிடத்திற்கு வந்து, போனைப் பெற்றுக்கொண்டு 100 டாலர் மதிப்புள்ள 19 நோட்டுகளைக் கொடுத்துவிட்டு உடனடியாகக் கிளம்பிச் சென்றுள்ளார்.
வீட்டிற்குச் சென்று நோட்டுகளைப் பார்த்தபோது, அவற்றின் தொடு உணர்வு வித்தியாசமாக இருந்ததையும், அனைத்து 100 டாலர் நோட்டுகளிலும் ஒரே சீரியல் எண் அச்சிடப்பட்டிருந்ததையும் ஜே கவனித்துள்ளார்.
அவர்களிடம் ஏற்கனவே இருந்த ஒரு உண்மையான 100 டாலர் நோட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, அவை அனைத்துமே போலி நோட்டுகள் என்பது உறுதிப்பட்டது. உடனடியாக அவரைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அந்த நபர் தனது ஃபேஸ்புக் கணக்கையே நீக்கியிருந்தார்.
இதன் மூலம் அவர் திட்டமிட்டே இந்த மோசடியைச் செய்தது தெளிவானது. தான் ஏமாந்தது போல வேறு யாரும் ஏமாறக்கூடாது என்பதற்காகவே இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகக் கூறிய ஜே, அந்தப் போலி நோட்டுகளைக் காவல்துறையிடம் ஒப்படைக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
போலி நோட்டுகளைத் தெரிந்தே வைத்திருப்பதோ அல்லது பயன்படுத்துவதோ சட்டப்படி குற்றமாகும்.























