ஷங்கிரி-லா ஹோட்டல் விவகாரம் குறித்து ஜி.எல். பீரிஸ் விளக்கம்
இலங்கை
இலங்கையில் ஷங்கிரி-லா (Shangri-La) ஹோட்டல் முதலீடு தொடர்பான சூழ்நிலைகள் குறித்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தம்மிடம் விசாரணை நடத்தியதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விளக்கமளித்துள்ள அவர், உள்நாட்டுப் போர் முடிவடைந்த சில மாதங்களுக்குப் பின்னர், 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் காலப்பகுதியில் இலங்கை குறிப்பிடத்தக்க பொருளாதார சவால்களை எதிர்கொண்டிருந்ததுடன், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும் சிரமங்களைச் சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார். தீவுகள்ஆராயுங்கள்
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஷங்கிரி-லா ஹோட்டல் நிறுவனத்தின் பிரதிநிதிகள், இலங்கையில் ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதில் ஆர்வம் காட்டியதாகவும், இதற்காக இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயத்தில் உயர்மட்ட அனுமதி அவசியம் எனக் கருதியதால், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்கு அதனைக் கொண்டுசென்றதாகவும் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, முதலீட்டாளர்களின் முன்மொழிவை வரவேற்ற ஜனாதிபதி, போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து நாட்டில் மேம்பட்டிருந்த பாதுகாப்புச் சூழலை எடுத்துரைத்து, முதலீட்டாளர்களை இலங்கைக்கு வர ஊக்குவிக்குமாறு தமக்கு அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொறுப்பும் தமக்கு வழங்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிக செலவுகளை மேற்கொள்ளும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்ப்பதுடன், நாட்டின் மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும் ஷங்கிரி-லா முதலீட்டை அரசாங்கம் ஊக்குவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஷங்கிரி-லா ஹோட்டலின் வருகையானது, ஏனைய சர்வதேச ஹோட்டல் நிறுவனங்களும் இலங்கையில் முதலீடு செய்வதற்கு நம்பிக்கையை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், கொழும்பில் அமைந்துள்ள ஐடிசி ரத்னதீபா ஹோட்டல் உள்ளிட்ட பின்னரான அபிவிருத்திகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பல புதிய ஹோட்டல்கள், வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு, குறிப்பிடத்தக்க அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த முதலீடு தொடர்பில் தம்மீது எந்தவொரு தவறான செயற்பாட்டுக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை என வலியுறுத்தியுள்ள பீரிஸ், முதலீடு இடம்பெற்ற சூழ்நிலைகள் மற்றும் அக்காலப்பகுதியில் அரசாங்கத்தின் பங்களிப்பு தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தம்மை அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.






















