• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெகு விரைவில், பாரிஸ் ஒரு முஸ்லிம் நகரமாகிவிடும்.. பிரான்ஸ் அதிபர் மேக்ரானை எச்சரித்த டிரம்ப்

பிரான்சில் நடந்து வரும் போராட்டங்களுக்கும் வன்முறைக்கும் அங்கு குடியேறிய வெளிநாட்டவரே காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றம் சாட்டினார்.

ஐரோப்பாவும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் தங்கள் எல்லைகளை மேலும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"பிரான்சில் நடப்பது குடியேற்றம் சம்பந்தப்பட்டது. பள்ளிகள் அல்லது வேறு எதைப் பற்றியும் அல்ல" என்று ஒரு நாள் முன்னதாக தான் கூறியதையே மீண்டும் கூறிய டிரம்ப், "எல்லைகளை மூடுமாறு அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் நான் கூறியுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

பணவீக்கம், விலைவாசி உயர்வு, பொது சேவைகள் மற்றும் பள்ளிகளின் மோசமான நிலை ஆகியவற்றை எதிர்த்து பிரான்ஸ் முழுவதும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர்.

தலைநகர் பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் கடந்த சனிக்கிழமை போராட்டங்கள் வெடித்தன. அவை சமீப ஆண்டுகளில் பிரான்சில் நடந்த மிக மோசமான வன்முறைகளில் ஒன்றாக மாறியுள்ளன.

பல நகரங்களில் நடந்த நாசவேலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களை தொடர்ந்து, பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவின் உத்தரவின் பேரில், உள்ளூர் அதிகாரிகள் பாரிஸ், லில்லி மற்றும் நைஸ் உள்ளிட்ட பல நகரங்களின் பதற்றமான பகுதிகளில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தினர்.

பிரதமர் லெகோர்னு நிலைமை கட்டுப்படுத்தப்படாமல் தொடர்ந்தால் அவசரநிலையை அமல்படுத்துவது குறித்து சூசகமாக தெரிவித்தார்.

அவர் போராட்டக்காரர்களை கொள்ளையர்கள் மற்றும் கலவரக்காரர்கள் என்று வர்ணித்ததோடு, குற்றவாளிகளை அடையாளம் காண 200க்கும் மேற்பட்ட புலனாய்வாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில் மேக்ரானுடனான தொலைபேசி உரையாடலை குறிப்பிட்டு டிரம்ப், "நீங்கள் பிரான்சில் ஒரு பெரிய தவறைச் செய்கிறீர்கள். உலகம் முழுவதிலுமிருந்து மக்களை உள்ளே வர அனுமதிக்கிறீர்கள். முழு உலகமும் உள்ளே வந்து கொண்டிருந்தது. வெகு விரைவில், பாரிஸ் ஒரு முஸ்லிம் நகரமாகிவிடும்" என்று அவரிடம் எச்சரித்ததாக கூறினார்.

"ஐரோப்பா தனது எல்லைகளை மூடி, குற்றவாளிகளை வெளியேற்றாவிட்டால், ஐரோப்பா அழிந்துவிடும்," என்று அவர் மேலும் கூறினார்.

Leave a Reply