• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வன்முறையை ஒட்டி பிரான்ஸ் நாட்டின் பல்வேறு நகரங்களில் இரவு நேர ஊரடங்கு

பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வன்முறை சம்பவங்களால் நாடு அதிர்ந்ததை தொடர்ந்து, பிரான்ஸ் தனது பல வடக்கு நகரங்களில் இன்று (திங்கள்) மற்றும் நாளை (செவ்வாய்) இரவுகளில் பகுதி நேர ஊரடங்கை அறிவித்தது.

பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவின் அலுவலகத்தின்படி, லில் உட்பட நான்கு வடக்கு நகரங்களில் அந்த இரண்டு நாட்களில் இரவு 8:00 மணி முதல் காலை 6:00 மணி வரை (1800 முதல் 0400 GMT வரை) பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட இருந்தது.

முன்னதாக நாடு தழுவிய அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது, வன்முறை குழுக்கள் அதிகாரிகளுடன் மோதி கடைகளை கொள்ளையடித்ததை தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும் குறைந்தது 1,800 பேரை காவல்துறை கைது செய்தது.

நேற்று முன்தினம் (சனிக்கிழமை) பல நகரங்களில், முகமூடி அணிந்த குழுக்கள் தீ வைத்து, நகர மன்றங்கள் உள்ளிட்ட பொது கட்டிடங்களை தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய நகரமான லிமோஜஸில், 19 ஆம் நூற்றாண்டின் நகர மன்ற கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததில், அதன் கூரை இடிந்து விழுந்து, கட்டிடம் கிட்டத்தட்ட அழிந்தது.

பாரிஸில் உள்ள பிளேஸ் டி லா ரிபப்ளிக் சதுக்கத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் கூடினர். ஆங்காங்கே பதற்றம் அதிகரித்ததால், அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர்.

"போராட்டம் செய்வதற்கான உரிமை ஒரு அடிப்படை உரிமை. வன்முறையின் மூலம் வேண்டுமென்றே மற்றும் கூட்டாக குழப்பத்தை ஏற்படுத்துவது அப்படிப்பட்ட உரிமை அல்ல," என்று உள்துறை அமைச்சர் லாரன்ட் நூனெஸ் எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டார். பாரிஸ், மார்சேய், லியோன் மற்றும் போர்டோ உள்ளிட்ட நகரங்களில் நூற்றுக்கணக்கான வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, பிரான்ஸ் முழுவதும் நடந்த போராட்டங்களில் சுமார் 5,50,000 பேர் பங்கேற்றனர், ஆனால் அமைப்பாளர்கள் இந்த எண்ணிக்கையை சுமார் 800,000 என குறிப்பிட்டனர். சமூக அநீதிக்கு எதிராக போராடுவதற்காக 2018-இல் உருவான "மஞ்சள் அங்கி" இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க விரும்பும் ஒரு தொழிலாளர் சங்கம், மாணவர் அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களின் அழைப்புகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் செவிசாய்த்தனர்.
 

Leave a Reply