அவர்தான் முக்கிய கதாபாத்திரம்.
சினிமா
அப்பாவி ஏழைக் கிழவர். பிரியமாக வளர்க்கும் ஆட்டை மணல் திருடர்கள் லாரி ஏற்றிக் கொன்று விடுகிறார்கள். போலீஸ் ஸ்டேஷனில் போய்ப் புகார் செய்கிறார். முதலில் கேலி பண்ணிச் சிரிக்கிறார்கள். ‘ஆட்டை அடிச்சதுக்கெல்லாம் கொலைக் கேஸு குடுக்க முடியாது பெருசு’. அப்புறம் கேஸ் எழுதின மாதிரி பாவ்லா பண்ணி ஏமாற்றுகிறார்கள். இது சரியில்லை என்று அவர் சொல்லும் போது மரியாதைக் குறைவாய்ப் பேசி கழுத்தைப் பிடித்து ஸ்டேஷனை விட்டு வெளியில் தள்ளி மிதிக்கிறார் இன்ஸ்பெக்டர்.
அதே மணல் கூட்டம், தட்டிக் கேட்ட வி. ஏ. ஓவைப் போட்டுத் தள்ளுகிறார்கள். அதற்கு ஐ விட்னஸ் அந்தப் பெரியவர்தான். மணல் கொள்ளைக் கூட்டத்திடம் பணம் வாங்கிக் கொண்டு இஷ்டத்துக்குக் கேஸை மாற்றி எழுதுகிறார் இன்ஸ்பெக்டர். எல்லாம் பொய்ங்க இவங்கதான் கொன்னாங்க. என் ஆட்டையும் லாரி ஏத்திக் கொன்னுட்டாங்க. புகார் பண்ணினதுக்கு கழுத்தைப் பிடிச்சித் தள்ளி மிதிச்சிட்டாருங்க என்று அழுகிறார் பெரியவர்.
‘டேய்.. கிழட்டுக்..’ என்று கோபத்தில் அவரை நோக்கிப் போகிறார் இன்ஸ்பெக்டர். நீதிபதிக்கு நிஜம் புரிகிறது. இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்ததுடன் அவரும் ஸ்டேஷனில் இருக்கும் போலீஸ்காரர்களும் பெரியவருக்கு சல்யூட் ஆஃப் ஹானர் பண்ண வேண்டும், அதுவும் ஸ்டேஷன் வாசலில் ஊர் அறிய என்று தீர்ப்புச் சொல்கிறார் நீதிபதி.
இப்படி ஒரு காட்சியைப் பார்த்தால் திருப்தியாக இருக்குமில்லையா?
இன்னொரு முக்கிய கதாபாத்திரமான கான்ஸ்டபிள் இளைஞனை இஷ்டத்துக்கு அவமானம் செய்கிறார் இன்ஸ்பெக்டர். செத்தாலும் உன்னை துப்பாக்கி பிடிக்க விடமாட்டேன் கக்கூஸ்தான் கழுவணும் என்று மட்டமாக நடத்துகிறார். அந்தப் பையனிடம் துப்பாக்கியைக் கொடுத்து பெரியவருக்கு பாடி கார்டாக அனுப்பும்படி நீதிபதி ஆணையிடுகிறார். உடம்பெல்லாம் கூனிக் குறுக அவர் கான்ஸ்டபிளிடம் துப்பாக்கியை நீட்டுகிறார்.
இதுவும் திருப்தியாக இருக்கிறது இல்லையா?
இப்படி நிறையக் காட்சி அமைப்புக்கள். படு சுவாரஸ்யம். இரண்டு குறைகள். ஒன்று, இலைமறைக் காயாக சின்ன ஜாதி வாசனை; அது இல்லாமலே கதை நன்றாக இருக்கும். இரண்டாவது அந்தத் துயர முடிவு. அது இல்லாமலே கூட எடுத்திருக்கலாம்.
நானாக இருந்தால் எப்படி எடுத்திருப்பேன் என்றால், கான்ஸ்டபிளின் கிரிட்டிக்கல் நிலை தெரிந்த மணல் கொள்ளையர் அவனைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி விடலாம் என்று பணத்தோடு வருகிறார்கள். பணத்தைக் கொடுக்க வருகிற போது, பெரியவர் நிலத்தை விற்ற பணத்தை, ‘இந்தாங்க தம்பி. ஆப்பரேஷனை ஜாம் ஜாம்ன்னு நடத்துங்க’ என்று கொடுக்கிறார். இப்படியான அமைப்பு அற்புதமாய் இருந்திருக்கும்!
ஆயினும் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி. கங்கை அமரன் ஒரு நடிகராக, புதுப் பரிமாணத்தைக் காட்டுகிறார்.
’லெனின் பாண்டியன்’ ….. அமேஸான் பிரைமில் கிடைக்கிறது.
KG Jawarlal






















