• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரொறன்ரோவில் நான்கு நாட்கள் தமிழின் பெருமையைப்  பறை சாற்றிய மாநாடு

கனடா

செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்
ரொறன்ரோவில் நான்கு நாட்கள் தமிழின் பெருமையைப்  பறை சாற்றிய மாநாடு!
செயற்கை அறிவு உலகம் வேகமாக விரிந்து பரந்து கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் செம் மொழித் தமிழின் தொன்மையையும் தமிழரின் பண்பாட்டு அடையாளத்தையும் நவீன அறிவியலோடு இணைத்துச் சிந்திக்க வைத்த செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்  2026 மாநாடு ரொறன்ரோவில் கடந்த 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் மொழியின் தொன்மை தமிழரின் பண்பாடு கலை அறிவியல் சிந்தனை ஆகியவற்றை செயற்கை அறிவின் புதிய உலகத்துடன் இணைக்கும் நோக்கில் நடைபெற்ற இம்மாநாடு கனடா வாழ் தமிழர்களுக்கு மட்டுமன்றி உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் ஒரு முக்கியமான அறிவியல்–பண்பாட்டு சந்திப்பாக அமைந்தது.
மாநாட்டின் ஆரம்ப நாளான 15ஆம் திகதி இடம்பெற்ற தமிழர் பண்பாட்டு அணிவகுப்பு அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்தது. பெரும்பாலானோர் வேட்டி சால்வை சேலை போன்ற பாரம்பரிய ஆடைகளில் அணி வகுத்து வந்ததுடன் பறை முழங்க மேளதாள வாத்தியங்கள் ஒலிக்க பொய்க்கால் குதிரை ஆட்டமும் நடனங்களும் இடம்பெற்ற காட்சி தமிழர் பண்பாட்டின் தொன்மையை  வெளிப்படுத்தியது.
அந்தக் காட்சியைப் பார்த்த பலருக்கு 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நினைவுக்கு வந்தது. அன்றைய யாழ்ப்பாண மண்ணில் தமிழுக்காக எழுந்த எழுச்சியின் ஓர் ஒலிப் பெருக்கமாகவே ரொறன்ரோவில் இடம்பெற்ற இந்தப் பண்பாட்டு அணிவகுப்பையும் பார்க்க முடிந்தது.

இம்மாநாட்டின் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்திய அம்சமாக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அமைந்தன.
13க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 497 ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டுக்காகப் பெறப்பட்டிருந்தன. அவற்றில் கவனமான பரிசீலனைக்குப் பின்னர் 90 ஆய்வுக் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநாட்டில் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டன.
இதன் மூலம் ரொறன்ரோவில் நடைபெற்ற இம்மாநாடு வெறுமனே ஒரு பண்பாட்டு விழாவாக அல்லாது உலகத் தமிழறிஞர்கள் கல்வியாளர்கள் ஆய்வாளர்கள் மற்றும் அறிவுசார் துறையினரை ஒன்றிணைத்த ஒரு முக்கியமான ஆய்வுக் களமாகவும் தன்னை நிலைநிறுத்தியது.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் கல்வியாளர்கள் ஆய்வாளர்கள் கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை மாநாட்டுக்கு சர்வதேசத் தோற்றத்தையும் அறிவுசார் கனத்தையும் வழங்கியது.
மாநாட்டின் முதல் இரண்டு நாட்களும் ஆய்வரங்குகளாக இடம்பெற்றன. தமிழ் மொழி அதன் தொன்மை எதிர்காலம் செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதில் தமிழின் இடம் போன்ற பல்வேறு தளங்களில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து 17ஆம் திகதி நடைபெற்ற கலைநிகழ்வுகள் மாநாட்டுக்கு வேறொரு பரிமாணத்தை வழங்கின. கனடாவில் வாழும் இளம் தமிழ் கலைஞர்களுடன் ஏனைய நாடுகளில் வாழும் தமிழ்க் கலைஞர்களும் இணைந்து தமது திறமைகளை வெளிப்படுத்தியமை குறிப்பிடத் தக்கது. ஆய்வும் அறிவியலும் மட்டுமன்றி தமிழரின் கலை இசை நடனம் பண்பாடு ஆகியனவும் தமிழின் அடையாளத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வலிமையான கருவிகள் என்பதை இந்நிகழ்வு உணர்த்தியது.
நான்கு நாட்கள் நடைபெற்ற இம்மாபெரும் நிகழ்வை மிகுந்த நேர்த்தியுடனும் திட்டமிடலுடனும் முன்னெடுத்து வெற்றிகரமாக நிறைவு செய்வதில் திரு. நிமால் விநாயகமூர்த்தி அவர்களும் அவரது குழுவினரும் ஆற்றிய பணி பாராட்டுக்குரியது.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேராளர்களை வரவேற்று அவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து ஆய்வரங்குகள் முதல் கலைநிகழ்வுகள் வரை ஒவ்வொரு நிகழ்வையும் ஒழுங்கமைத்து நடத்துவது சாதாரணமான பணியல்ல. அதன் பின்னணியில் நீண்டகாலத் திட்டமிடலும் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்திருக்க வேண்டும்.
அவர்களது உழைப்புக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் வகையில் 18ஆம் திகதி நடைபெற்ற வருடாந்த இராப்போசன விருந்தும் விருது வழங்கும் நிகழ்வும் அரங்கம் நிறைந்த நிகழ்வாக அமைந்தது.
மாநாட்டில் பங்கேற்ற பேராளர்கள் ஆய்வாளர்கள் கலைஞர்கள் மற்றும் இதனைச் சிறப்புற நடத்துவதற்கு ஒத்துழைத்த அனைவரையும் கௌரவிக்கும் வகையில் இடம்பெற்ற இந்த நிகழ்வு நான்கு நாள் மாநாட்டின் நிறைவுக்கு ஒரு சிறப்பான முத்தாய்ப்பாக அமைந்தது.
எந்தவொரு பெரிய நிகழ்விலும் குறைகள் முற்றாக இல்லாமல் இருப்பது அரிது. இம்மாநாட்டிலும் சில குறைபாடுகள் தென்பட்டன என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் அவற்றை முன்னிறுத்தி நிகழ்வின் ஒட்டுமொத்த வெற்றியை மறைத்துவிட முடியாது.
காலத்தின் தேவையை உணர்ந்து செயற்கை அறிவின் புதிய உலகில் செம்மொழித் தமிழின் இடம் என்ன? தமிழரின் அறிவு பண்பாடு கலை மொழி ஆகியவற்றை நவீன தொழில்நுட்பத்துடன் எவ்வாறு இணைத்துச் செல்ல முடியும்? என்ற கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியாக இம்மாநாடு அமைந்தமை தான் அதன் மிகப்பெரிய சிறப்பு.
தமிழ் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழைமையான மொழி என்று பெருமை பேசுவதோடு நின்றுவிடாமல் எதிர்கால உலகின் அறிவியல் மொழியாகவும் தமிழை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம். அந்தப் பயணத்திற்கான ஒரு சிந்தனை வாசலை ரொறன்ரோ மாநாடு திறந்திருக்கிறது.
1974இல் யாழ்ப்பாண மண்ணில் தமிழுக்காக ஒன்று கூடிய ஆய்வுலகம் பல தசாப்தங்களுக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர் வாழும் ரொறன்ரோ மண்ணில் புதிய தொழில்நுட்ப உலகை நோக்கி திரும்பியுள்ளது.
அன்று தமிழின் தொன்மையை உலகுக்கு எடுத்துச் சென்றோம். இன்று அந்தத் தமிழின் எதிர்காலத்தை செயற்கை அறிவின் உலகில் நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு எம்முன் நிற்கின்றது.
அந்தப் பொறுப்பை நினைவு ஊட்டிய வகையில் செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் – 2026” மாநாடு காலத்தின் தேவையறிந்து நடைபெற்ற ஒரு முக்கியமான தமிழ்ச் சந்திப்பாக வரலாற்றில் பதிவாகும் என்பதில் ஐயமில்லை.
T.K.பரமேஸ்வரன் 
ஈழநாடு - கனடா

 

Leave a Reply