போரை மீண்டும் தொடங்கினால் - அமெரிக்க உட்கட்டமைப்புகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
போரை மீண்டும் தொடங்கினால் வளைகுடா பகுதியிலுள்ள அமெரிக்காவின் உட்கட்டமைப்பு மையங்கள், செயற்கை நுண்ணறிவு தளங்களை அழிப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானுக்கு சொந்தமான தொலைக்காட்சியொன்றுக்கு அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைவர் மொஹ்சென் ரெசாயி வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
30 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலில் அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகள், ஹோர்முஸ் நீரிணை விவகாரம், போர் மீண்டும் நடந்தால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் தொழில்நுட்ப சொத்துக்கள் எவ்வாறு தாக்குதல் நடத்தப்படும் போன்ற விடயங்கள் குறித்து பேசியுள்ளார்.
ஈரான் முழுமையாக தயார்
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதிகளில் அமெரிக்காவுக்கு அதிக மதிப்புமிக்க சொத்துக்கள் உள்ளன. நாங்கள் இதுவரை இந்தச் சொத்துக்களை எங்கள் இலக்குகளின் பட்டியலில் சேர்க்கவில்லை.
ஆனால், போர் மீண்டும் மூண்டால் அங்குள்ள தரவு மையங்கள், செயற்கை நுண்ணறிவு வசதிகள் மற்றும் எண்ணற்ற பிற தளங்கள் அழிக்கப்படும்.
இந்தச் சொத்துக்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு என்று வர்ணித்த ரெசாயி அவற்றின் மதிப்பு 2 ட்ரில்லியன் டொலருக்கும் அதிகம் எனவும் குறிப்பிட்டார்.
அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், புதிய திறன்களைப் பயன்படுத்த ஈரான் "முழுமையாகத் தயாராக" இருப்பதாகவும் அவர் கூறினார்.
"முதல் வாரத்திலேயே எங்கள் அனைத்துத் திறன்களையும் வெளிப்படுத்தும் வகையில் நாங்கள் செயல்படவில்லை. அப்படிச் செய்திருந்தால், அதன் பிறகு பயன்படுத்துவதற்கு எங்களிடம் மிகக் குறைவான வளங்களே எஞ்சியிருக்கும்," என்று அவர் கூறினார். "
இன்று, மற்றொரு மோதல் ஏற்பட்டால், நாங்கள் நிச்சயமாக மிகவும் விரிவான மற்றும் பரந்த திட்டத்துடன் எதிரியை எதிர்கொள்வோம்." எனவும் அவர் தெரிவித்துள்ளார்.






















