நெக்ஸஸ் பயண அட்டை விண்ணப்பங்களுக்கான புதிய காலக்கெடு
இலங்கை
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பயணத்தை விரைவுபடுத்த உதவும் 'நெக்ஸஸ்' பயண அட்டைக்கு விண்ணப்பிக்கும் கனடியர்களுக்கான புதிய காலக்கெடுவை கனடா எல்லைச் சேவைகள் முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல், நெக்ஸஸ் விண்ணப்பதாரர்கள் தங்களது தற்காலிக ஒப்புதலைப் பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குள் சேர்க்கை நேர்காணலை முன்பதிவு செய்ய வேண்டும் என கனடா எல்லைச் சேவைகள் முகவர் நிறுவனம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட தாமதங்களால், நேர்காணலைத் திட்டமிடுவதற்கான கால வரம்பை கனடா எல்லைச் சேவைகள் முகவர் நிறுவனம் தற்காலிகமாக ஐந்து ஆண்டுகளாக உயர்த்தியிருந்தது.
தற்போது நேர்காணலுக்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் பழைய இரண்டு ஆண்டுகள் எனும் காலக்கெடு நடைமுறைக்குக் கொண்டுவரப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வர்த்தகக் கொள்கைகள் காரணமாக, 2025 ஆம் ஆண்டில் கனடாவில் நெக்ஸஸ் விண்ணப்பங்கள் சுமார் 50 சதவீதம் சரிவடைந்தன. 2024 ஆம் ஆண்டில் 6,95,533 கனடியர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 2025 இல் அந்த எண்ணிக்கை 3,44,257 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.






















