கனடாவில் போலி வாகனப் பதிவு மோசடி - 4 பேர் கைது
கனடா
கனடாவில் 100,000 டொலர்களுக்கும் அதிகமான 407 ETR சுங்கக் கட்டண ஏய்ப்புடன் தொடர்புடைய போலி வாகனப் பதிவு மோசடி சம்பவம் குறித்து நான்கு பேரை கைது செய்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2026 ஆம் ஆண்டு மே மாதம் 'புராஜெக்ட் ஆக்டேன்' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சிறப்பு விசாரணை, போக்குவரத்து அமைச்சு மற்றும் 407 ETR ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.
'சர்வீஸ் ஒன்டாரியோ' மையங்களில் பல தனிநபர்களால் சமர்ப்பிக்கப்பட்ட போலி ஆவணங்களை இலக்கு வைத்து இந்த விசாரணை நடத்தப்பட்டது.
வாகனப் பதிவுகள், உரிமத் தகடுகள் மற்றும் 'சர்வீஸ் ஒன்டாரியோ' பரிவர்த்தனைகளுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதன்போது, இந்த வாகன உரிமத் தகடுகள் இல்லாத போலி நிறுவனங்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. இதன் மூலம் சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பித்து, 100,000 டொலருக்கும் அதிகமான 407 ETR சுங்கக் கட்டணங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடக் கட்டணங்களைச் செலுத்தாமல் அவர்கள் ஏமாற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது மோசடி, போலி ஆவணங்களைப் பயன்படுத்துதல் மற்றும் குற்றச் செயல்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த விசாரணையின் போது வாகன அடையாள எண் மாற்றப்பட்டு திருடப்பட்ட 10 வாகனங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட இந்த வாகனங்களின் மொத்த மதிப்பு சுமார் 750,000 டொலர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.






















