வெளிநாட்டில் வேலை தேடுபவர்களை குறிவைத்து பாரிய மோசடி - விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
இலங்கை
இஸ்ரேலில் இலவச வேலை வாய்ப்புகளை வழங்குவதாக கூறி, வேலை தேடுபவர்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களை பெற முயற்சிக்கும் ஒரு போலி இணையதளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை அறிவித்துள்ளது. தெற்காசியஉடைகளைத் தேர்ந்தெடு
இந்த இணையதளம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பெயர், உத்தியோகபூர்வ சின்னம் மற்றும் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துகின்றமை தெரியவந்துள்ளது.
இந்த மோசடியின் பல இணைப்புகள், பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் அல்லது உத்தியோகபூர்வ இணையவழி ஆட்சேர்ப்பு செயல்முறை என்று மக்களை நம்ப வைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக பணியகம் கூறுகின்றது.
இந்த மோசடி இணைப்பு மூலம், பயனர்கள் இணையவழி விண்ணப்பத்திற்கு வழிநடத்தப்பட்டு முழுப் பெயர், பிறந்த திகதி, தேசிய அடையாள எண் (NIC), பாலினம் மற்றும் கைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை பெற முயற்சிக்கப்படுகின்றது.
இந்த மோசடியானது அடையாளத் திருட்டு, ஆள்மாறாட்டம், மோசடியான தரவு சேகரிப்பு, சமூகப் பொறியியல் மற்றும் தனிப்பட்ட தரவுகளைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று பணியகம் குறிப்பிடுகின்றது.
இஸ்ரேலில் வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து, தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை பெறுவதே இந்த மோசடியின் நோக்கமாக இருக்கலாம் என்று பணியகம் சுட்டிக்காட்டுகின்றது.
மேலும், இஸ்ரேலிய வேலைவாய்ப்பு தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களைப் பெறும்போது, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் பணியகம் அறிவுறுத்துகின்றது.






















