அம்பாறை மாவட்டத்தில் கடும் வறட்சி - 3,794 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம்
இலங்கை
அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 3794 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு இதுவரை குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தெரிவித்தார்.
பதியத்தலாவ பிரதேச செயலகப் பிரிவில் 17 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 2910 குடும்பங்களின் 9177 பேரும், மகா ஓயா பிரதேச செயலகப் பிரிவில் 865 குடும்பங்களின் 2800 பேரும் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் 03 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 19 குடும்பங்களின் 64 பேரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றங்கள் பிரதேச செயலகங்கள் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆகியவற்றின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் தேவையேற்படும் பட்சத்தில் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதேச செயலாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் நிதி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வறட்சி மற்றும் அதிகரிக்கும் வெப்பநிலையை எதிர்கொள்ள மாவட்ட பிரதேச மற்றும் கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுக்களை வலுப்படுத்தி முன்னாயத்த மற்றும் அனர்த்த அபாய முகாமைத்துவத் திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















