செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தை அழிக்கக்கூடும் - எச்சரிக்கை குறித்து கனடா அரசு தீவிர கவனம்
கனடா
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதகுலத்தையே அழிக்கக்கூடும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சியாளர் எச்சரித்ததைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தில் நிலவும் சூழ்நிலையை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருவதாக கனடாவின் செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சர் இவான் சாலமன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஓபன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் நிறுவனங்களில் பணியாற்றி விலகிய ஜேக்கப் காக்சன் என்ற ஆராய்ச்சியாளர், AI நிறுவனங்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதாகவும், சுய-மேம்பாட்டு சூப்பர் இன்டெலிஜென்ஸை நோக்கி வேகமாகச் சென்று மக்களின் உயிரை வைத்துச் சூதாடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் (2030-க்குள்) AI மனிதகுலத்தையே அழிக்கக்கூடும் என அதை உருவாக்கும் நிபுணர்களே உண்மையாக நம்புவதாகக் காக்சன் குறிப்பிட்டுள்ளார்.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் AI பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் இவான் ஹூபிங்கரும் இதை ஒப்புக்கொண்டு, அடுத்த 10 ஆண்டுகளில் AI மனிதர்களை அழிப்பதற்கான சாத்தியக்கூறு 10 சதவீதத்திற்கும் அதிகம் எனக் கூறியுள்ளார்.
எட்மண்டன் நகரில் பேசிய அமைச்சர் இவான் சாலமன், இதுபோன்ற எச்சரிக்கைகள் புதியவை அல்ல என்றும், இதற்குச் சட்டரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான தீர்வுகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
பெரிய AI நிறுவனங்களைக் கட்டுப்படுத்த புதிய ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் AI முன்னோடியான யோஷுவா பெஞ்சியோ போன்றவர்களுடன் இணைந்து AI பாதுகாப்பில் அரசு முதலீடு செய்து வருவதாகவும், சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
AI தொழில்நுட்பத்தின் எதிர்மறையான விளைவுகள் குறித்து உண்மையான கவலைகள் இருப்பதாக ஒப்புக்கொண்ட அமைச்சர், பொதுமக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் கனடா அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக உறுதி அளித்துள்ளார்.






















