16 வயது சிறுவன் படுகொலை - தேடப்பட்டு வந்த நபர் கனடாவில் கைது
கனடாவின் கியூபெக் மாகாணம், ஷவினிங்கன் பகுதியில் 16 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 41 வயதான பிலிப் பெனாய்ட் என்பவரைக் கியூபெக் மாகாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நான்கு நாட்களாக தீவிரமாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர், ஷவினிங்கன் நகருக்கு வடக்கே சுமார் 57 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக் வேய்லெட் பகுதிக்கு அருகில் புதன்கிழமை பிற்பகல் 4:30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்ய முயன்ற போது அவர் பொலிஸாருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், அதைத் தொடர்ந்து அவர் பலவந்தமாகக் கட்டுப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு, கூர்மையற்ற கனமான பொருளால் தாக்கப்பட்டு 16 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில், பிலிப் பெனாய்ட் மீது முதல் நிலைக்கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 201-வது அவென்யூவில் உள்ள வீடொன்றில் இருந்து சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் கொலை வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பிலிப் பெனாய்ட் மனசிதைவு நோய் மற்றும் சமூக பயம் உள்ளிட்ட தீவிர மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேடுதல் வேட்டையின் போது, இவரைக் கண்டால் பொதுமக்கள் யாரும் நேரடியாக அணுக வேண்டாம் எனவும், உடனடியாக அவசர உதவி எண்ணான 911-ஐத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் எச்சரித்திருந்தனர்.
கொல்லப்பட்ட சிறுவனுக்கான அஞ்சலி கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு கியூபெக்கின் ட்ராய்ஸ்-ரிவியர்ஸ் பகுதியில் நடைபெறவுள்ளது.






















