கோவை மருத்துவமனையில் நடிகர் ராம் சரணுக்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை
இலங்கை
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ராம்சரண், மாவீ ரன், 'ஆர்.ஆர்.ஆர்.' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். கடினமான சண்டை காட்சிகள் மற்றும் நடன அசைவுகளுக்கு பெயர் பெற்ற இவர், 'பெத்தி' திரைப்படத்தில் நடித்து வந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு விறுவிறுப்பாக நடை பெற்றது. அப்போது அதில் இடம்பெற்ற ஒரு மல்யுத்த சண்டை காட்சியில் ராம்சரண் பங்கேற்றார். அப்போது அவருக்கு இடதுகை மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் படத்தின் இறுதிகட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ராம்சரண் உடனடியாக பெரிய அளவிலான சிகிச்சை மேற்கொள்ளாமல் தற்காலிகமாக தள்ளி வைத்திருந்தார்.
பெத்தி படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அவருக்கு எம்.ஆர்.ஐ., எக்ஸ்ரே பரிசோதனைகள் செய்து பார்க்கப்பட்டன. மருத்துவ பரிசோதனையின் முடிவில், ராம்சரணுக்கு இடதுகை மணிக்கட்டில் தசைநார் கிழிவு மற்றும் லேசான எலும்பு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் தசைநார் முழுமையாக கிழிந்து உள்ளதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்வது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.
இந்தியாவில் எலும்பு, தசைநார் மற்றும் கை அறுவை சிகிச்சையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே ராம்சரண் அறுவை சிகிச்சைக்காக ஐதராபாத் அல்லது வெளிநாடுகளுக்கு செல்லாமல், கோவை தனியார் மருத்துவமனையை தேர்ந்தெடுத்தார்.
அதன்படி, அவர் சிறப்பு விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அப்போது அவருடன் தந்தை ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி, தாயார் சுரேகா மற்றும் மனைவி உபாசனா கொனிடேலா ஆகியோரும் வந்திருந்தனர்.
கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நடிகர் ராம்சரணுக்கு இன்று மணிக்கட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ராம்சரண் ஒருசில வாரங்கள் முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் காயம் அடைந்த இடது கை மணிக்கட்டு இயல்புநிலைக்கு திரும்ப குறைந்தது 4-6 வாரங்கள் வரை ஆகும் என்பதால் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படலாம். இதனால் அவர் கோவை மருத்துவமனையில் இன்னும் சில நாட்கள் தங்கியிருந்து டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி சில நாட்கள் ஓய்வெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை தனியார் மருத்துவமனையில் நடிகர் ராம்சரண் அனுமதிக்கப்பட்டு உள்ள செய்தி வெளியானதில் இருந்து, லட்சக்கணக்கான ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.






















