• Welcome to TamilsGuide
செய்திகள் 1

74 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து - 52 பேர் பலியான விமானத்தின் பாகங்கள் அட்லாண்டிக் கடலில் மீட்பு

1952ஆம் ஆண்டு இடம்பெற்ற கோரமான விமான விபத்தில் சிக்கிய விமானத்தின் பாகங்கள், 74 ஆண்டுகளுக்குப் பின்னர் அட்லாண்டிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விமானப் பயணங்களின் போது பயணிகளுக்கு அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் நடைமுறைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்த விபத்துகளில் ஒன்றாக 1952ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த விமான விபத்து குறிப்பிடப்படுகிறது.

1952ஆம் ஆண்டு அமெரிக்காவின் தன்னாட்சி பிரதேசமாக இருந்த போர்ட்டோ ரிகோவின் சான் ஜூவான் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி பேன் ஆம் (Pan Am) நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று பயணத்தை ஆரம்பித்தது.

குறித்த விமானத்தில் 69 பயணிகள் இருந்த நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலின் வான் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு காணாமல் போனது

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், விமானத்தின் இரு இயந்திரங்களும் செயலிழந்ததைத் தொடர்ந்து அது அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

விமானம் கடலில் விழுந்த பின்னர், அதிலிருந்த உயிர்காப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி 17 பேர் கடலில் மிதந்து உயிர் தப்பியுள்ளனர். எனினும், 52 பேர் விமானத்துடன் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் 13 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது கடலின் ஆழம் மற்றும் கடினமான சூழ்நிலைகள் காரணமாக விமானத்தின் சிதைவுகளை கண்டுபிடிக்க முடியாமல் போனது.

எனினும், தற்போது மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில், அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 2,000 அடி ஆழத்தில் விமானத்தின் இறக்கைகள் மற்றும் வால் பகுதி உள்ளிட்ட முக்கிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், பல தசாப்தங்களாக நீடித்த இந்த விமான விபத்து தொடர்பான தேடுதல் நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 74 ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைத்துள்ள இந்த கண்டுபிடிப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
 

Leave a Reply