கோலாகலமாக ஆரம்பமாகிய அரச அதிபர் வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி
இலங்கை
யாழ். மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு இடையிலான விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் ‘2026ஆம் ஆண்டிற்கான யாழ் அரச அதிபர் வெற்றிக்கிண்ண’ இறுதிப்போட்டிகள் இன்றையதினம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மைதானத்தில் மிக விமரிசையாகவும், கம்பீரமாகவும் ஆரம்பமாகின.
இன்று காலை 9:00 மணியளவில் நிகழ்வானது ஆரம்பமானது.
நிகழ்வின் தொடக்கத்தில் நிகழ்வுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசியக் கொடி மற்றும் பிரதேச செயலகங்களின் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
மங்கள நிகழ்வாக ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவினராலும் வண்ணமயமான பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. தொடர்ந்து, இந்து மற்றும் கத்தோலிக்க மதகுருமார்களின் ஆசிச் செய்திகளுடன், யாழ். மாவட்ட அரச அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் போட்டிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்த இறுதிப்போட்டி நிகழ்வுகளைக் காண்பதற்கும், அணிகளை உற்சாகப்படுத்துவதற்கும் யாழ் மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட அரச உத்தியோகத்தர்கள், பெருமளவிலான பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் எனப் பலரும் மைதானத்தில் திரண்டுள்ளனர்.
திருவிழா கோலம் பூண்டுள்ள வடமராட்சி கிழக்கு மைதானத்தில் போட்டிகள் அனைத்தும் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் இடம்பெற்று வருகின்றன.
























