கில்லர் படப்பிடிப்பின்போது விபத்து - ஒருவர் உயிரிழப்பு
சினிமா
நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கில்லர்’. இப்படத்திற்கான பூஜை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்று படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்து வரும் படம் இதுவாகும். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது ‘கில்லர்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை ஓட்டேரி பின்னி மில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில் மதன் என்பவர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் தீயில் சிக்கி 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும், 10-க்கும் மேற்பட்டோர் சிறு காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மதன் என்பவர் மதுரவாயலைச் சேர்ந்தவர் என்றும் ‘கில்லர்’ படத்தில் தொழில்நுட்ப வல்லுராக பணியாற்றி வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.























