• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசிய பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகளின் அபிவிருத்திக்காக 13.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

இலங்கை

2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில், தேசிய பாடசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளின் அபிவிருத்திக்காக வரலாற்றில் அதிகபட்சமான 13.5 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், பாடசாலைகளைப் புனரமைப்புச் செய்வதற்காக மேலதிகமாக 5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அத்தோடு மாணவர்களுக்கு அன்பையும், பாதுகாப்பையும், அரவணைப்பையும் வழங்கும் சிறந்த இடமாகப் பாடசாலையை மாற்றியமைப்பதற்கான பொறுப்பை, அரசாங்கம் என்ற வகையில் தாம் மிகுந்த நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேல் மாகாண தேசிய பாடசாலை அதிபர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களது திறன்களை மேம்படுத்தும் நோக்கில், கல்வி அமைச்சில் நேற்று (02) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, அமைச்சின் சுற்றறிக்கைகளுக்கு அமைய பாடசாலைகளின் நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுத்தல், நிதி வெளிப்படைத்தன்மையுடன் அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துதல் மற்றும் புதிய கல்விச் சீர்திருத்தத் திட்டங்களுக்கு அமைய பாடசாலைச் சூழலை வடிவமைத்தல் குறித்த வழிகாட்டல்கள் அதிபர்களுக்கு வழங்கப்பட்டன. 

அத்துடன், பாடசாலை நிர்வாகத்தில் அதிபர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களைப் பிரதமரிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

கல்வித்துறையின் தலைவர்களாகச் செயற்படும் அதிபர்களின் பொறுப்புணர்வையும், நெருக்கடியான காலங்களிலும் இருக்கும் வளங்களை முறையாக முகாமைத்துவம் செய்து கல்விச் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படும் விதத்தையும் பிரதமர் பாராட்டினார்.

இலங்கை பாடசாலைக் கட்டமைப்பில் நீண்டகாலமாக நிலவிவரும் நெருக்கடிகளுக்குத் தீர்வு கண்டு, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும் மாற்றத்தை நோக்கிய கல்விப் பாதையை உருவாக்குவதற்கான நிலையான திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும், ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம், 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் குறித்த ஆட்சேர்ப்புகள் இடம்பெறும் எனவும் தெரிவித்த பிரதமர், இதன் மூலம் 2027 ஆம் ஆண்டளவில் ஆசிரியர் வெற்றிடங்களை கணிசமாகக் குறைக்க முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகளை அபிவிருத்திச் செய்யும் வேலைத்திட்டங்களை விரைவாக நிறைவுசெய்து மாணவர்களின் பயன்பாட்டிற்குக் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், 2027 ஆம் ஆண்டிலிருந்து புதிய பாடசாலை அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
 

Leave a Reply