உலக எண்ணெய் சந்தை அதிர்வு - ஈரான் துறைமுகங்களை முடக்கும் அமெரிக்கா
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் உடன்பாடின்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் அனைத்துத் துறைமுகங்களையும் முற்றுகையிடப் போவதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளதாக அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, ஏப்ரல் 13 திங்கட்கிழமை (இன்று) கிழக்கு நேரப்படி காலை 10 மணி முதல் இந்த முற்றுகை அமுலுக்கு வருகிறது.
ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் இந்த முற்றுகை பொருந்தும்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக ஈரானியர் அல்லாத பிற நாட்டுத் துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்களின் சுதந்திரமான போக்குவரத்தில் அமெரிக்கப் படைகள் தலையிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது முழு நீரிணையையும் முற்றுகையிடுவோம் என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முந்தைய எச்சரிக்கையிலிருந்து சற்று மாறுபட்ட நிலைப்பாடாகக் கருதப்படுகிறது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்காவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளது.
அமெரிக்க மசகு எண்ணெய் 8 சதவீதம் அதிகரித்து ஒரு பீப்பாய் 104.24 டொலராக உயர்ந்துள்ளது. பிரெண்ட் மசகு எண்ணெய் 7 சதவீதம் அதிகரித்து ஒரு பீப்பாய் 102.29 டொலராகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் இந்த முற்றுகை முயற்சிக்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 22 வரை அமுலில் இருக்க வேண்டிய அமெரிக்க - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்த முற்றுகை மீறுவதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.
முற்றுகையை அமுல்படுத்த முயற்சிக்கும் இராணுவக் கப்பல்கள் கடுமையாக எதிர்கொள்ளப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் நீண்டகாலப் போருக்குத் தயாராக இருப்பதாகவும், அமெரிக்காவால் இந்தச் சூழலைத் தொழில்நுட்ப ரீதியாகக் கட்டுப்படுத்த முடியாது என்றும் ஈரான் தரப்புத் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்படும் நிலைக்கு மிக அருகில் இருந்த போதிலும், அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் கடைசி நேரத்தில் நிபந்தனைகளை மாற்றியதே தோல்விக்குக் காரணம் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரகச்சி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே அமெரிக்கா இந்த முற்றுகை முடிவை எடுத்துள்ளது.
பெப்ரவரி 28 முதல் நீடிக்கும் இந்தப் போரினால், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பகுதியைத் தீர்மானிக்கும் ஹோர்முஸ் நீரிணைப் போக்குவரத்து ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
























