• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமைதியை வலியுறுத்திய பாப்பரசர் - டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சை கருத்துகள்

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கிடையில், பாப்பரசர் லியோ XIV உலக அமைதிக்காக வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரானை குறிவைத்து தாக்குதல் நடத்தியதையடுத்து, அதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மற்றும் சில அரபு நாடுகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.இதனால் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், வத்திக்கானில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் உரையாற்றிய பாப்பரசர் லியோ XIV, போர்கள் மனிதகுலத்தைப் பிரிக்கின்றன என்றும், நம்பிக்கை மனிதர்களை ஒன்றிணைக்கிறது என்றும் தெரிவித்தார்.

“போர்களும் போதும். தற்பெருமை மற்றும் வலிமை காட்டும் முயற்சிகளும் போதும். உண்மையான வலிமை சேவையில் இருக்கிறது.

ஆட்சியாளர்கள் முட்டாள்தனமான போர்களிலிருந்து வெளியே வர வேண்டும். இது அமைதிக்கான நேரம். ஆயுதங்கள் மற்றும் மரணங்களுக்கு திட்டமிடுவதற்குப் பதிலாக பேச்சுவார்த்தை மற்றும் மத்தியஸ்தத்தைத் தேர்வு செய்யுங்கள்,” என அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாப்பரசரின் கருத்துகளுக்கு கடுமையான பதில் அளித்துள்ளார்.

தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்தில், “நான் பாப்பரசர் லியோவின் ரசிகன் அல்ல. அவர் தனது பணியைச் சரியாகச் செய்யவில்லை. அவர் மிகுந்த இடதுசாரி சிந்தனையாளர்.

குற்றங்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் பலவீனமானவர்,” என விமர்சித்தார். மேலும், “ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கலாம் என நினைக்கும் போப் நமக்கு தேவையில்லை.

நான் வெள்ளை மாளிகையில் இல்லாவிட்டால் அவர் வத்திக்கானில் இருக்கமாட்டார்,” என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்துடன், “பாப்பரசர் அரசியலில் ஈடுபடாமல் தனது மதப் பொறுப்புகளை மட்டுமே கவனிக்க வேண்டும்.

இல்லையெனில் அது கத்தோலிக்க தேவாலயத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும்,” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்து மோதல், ஏற்கனவே பதற்றம் அதிகரித்துள்ள சர்வதேச சூழ்நிலைக்கு மேலும் அரசியல் தீவிரத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a Reply