வளைகுடாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் மாயம் - ஈரான் மீது சந்தேகம்
அமெரிக்கக் கடற்படையால் கடல்சார் கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் அதிநவீன ‘MQ-4C டிரைட்டன்’ ட்ரோன் விமானம் ஒன்று, வழக்கமான ரோந்துப் பணியில் இருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 50,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த ஆளில்லா விமானம், வளைகுடா அல்லது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியப் பகுதியில் மறைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த ட்ரோன் மாயமானதை அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளதுடன், அதனைத் தேடும் பணிகளில் கடற்படைக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அமெரிக்க கொள்கைநார்த்ரோப் க்ரம்மன் (Northrop Grumman) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ‘டிரைட்டன்’ ட்ரோன், உலகின் மிக விலையுயர்ந்த உளவு விமானங்களில் ஒன்றாகும்.
ஒரே நேரத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாகப் பறக்கும் திறன் கொண்ட இது, 360 டிகிரி கோணத்தில் பரந்த கடல் பரப்பைக் கண்காணிக்கும் சென்சார்களைக் கொண்டுள்ளது. எதிரிக் கப்பல்களின் நடமாட்டம், ஏவுகணைத் தளங்கள் மற்றும் தகவல் தொடர்பு சமிக்ஞைகளை ரகசியமாகச் சேகரிப்பதே இதன் முக்கியப் பணியாகும்.
தற்போது இந்த விமானம் மாயமாகியுள்ளதால்,அமெரிக்காவிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஈரானின் பங்கு இருக்குமோ என்ற கோணத்திலும் அமெரிக்க உளவுத்துறை ஆய்வு செய்து வருகிறது.
ஏற்கனவே 2019-ம் ஆண்டு அமெரிக்காவின் இதே போன்ற ஒரு ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியிருந்தது. தற்போது மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், மின்னணு போர்முறை (Electronic Warfare) மூலம் இந்த ட்ரோனின் சமிக்ஞைகள் முடக்கப்பட்டிருக்கலாம் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கடலில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும், ஈரான் அல்லது பிற நாடுகள் இது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த டிரைட்டன் ட்ரோன் மாயமான செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சர்வதேச வான்பரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.






















