• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தையிட்டி விகாரை காணி விவகாரம் - உரிமையாளர்களை அடையாளம் கண்டு நிலத்தை ஒப்படைக்க நடவடிக்கை !

இலங்கை

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிப் பரப்புகளை அளவீடு செய்து, அதன் உண்மையான உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி விவகாரம் தொடர்பாக, காணி உரிமையாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (11) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலர் மற்றும் நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்:

“மக்களின் காணி மக்களுக்கே என்பதே எமது அரசாங்கத்தின் உறுதியான கொள்கை நிலைப்பாடாகும்.

அந்த அடிப்படையில், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிப் பகுதிகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளோம்.

இது தொடர்பாகக் கொழும்பில் நீதி அமைச்சர் மற்றும் புத்தசாசன அமைச்சருடன் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி இந்த இணக்கப்பாட்டை எட்டியுள்ளோம்.”

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, 17 காணி உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் அடுத்தகட்டமாக:ஏப்ரல் 17-ஆம் திகதி: குறித்த காணிகளை அளவீடு செய்யும் பணிகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும்.

காணி உரிமையாளர்கள் தமது எல்லைகளைச் சரியாக அடையாளம் காட்டினால், நிலஅளவைத் திணைக்களம் மூலம் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, காணிகள் மிக விரைவில் கையளிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், நீண்டகாலமாக இழுபறியில் இருந்த தையிட்டி காணி விவகாரத்திற்கு, நில அளவீட்டுப் பணிகள் முடிந்தவுடன் மிக விரைவில் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் இதன்போது உறுதி அளித்தார்.

காணி உரிமையாளர்கள் இந்தப் பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
 

Leave a Reply