• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டின் பாதுகாப்பு வீழ்ச்சி - திஸ்ஸ அத்தநாயக்க கண்டனம்

இலங்கை

இலங்கையில் மீண்டும் ஒரு கொ8லைக் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக தலைதூக்கி வருவதாகவும், நாட்டின் குற்றச்செயல்களை ஒடுக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிவிட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், 2025 ஆம் ஆண்டில் மட்டும் 109 படுகொ*லைகள் இடம்பெற்றுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே 9 படுகொலைகள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணிக்கும் குற்றவாளிகளுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறி பொலிஸார் வெளியிடும் கருத்துக்கள் அந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் முயற்சியாகும் என அவர் குற்றம் சாட்டினார்.

நாட்டின் மின்சாரக் கட்டணத்தை 14 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், தேர்தலுக்கு முன்னர் மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது அந்த வாக்குறுதியை மீறியுள்ளதாகத் தெரிவித்தார். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் சுமார் 3000 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த நஷ்டத்தை மக்கள் மீது சுமத்தவே இந்த மின் கட்டண உயர்வு மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முறையற்ற கொள்முதல் மற்றும் ஊழல்களுக்குப் பொறுப்பான விடயதான அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வரும் நிலையில், அரசாங்கத்தின் நெல் களஞ்சியசாலைகள் மூடப்பட்டுக் கிடப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் இடைத்தரகர்களும் பெரும் அரிசி ஆலை உரிமையாளர்களும் விவசாயிகளைச் சுரண்டுவதற்கு அரசாங்கம் வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை உரிய நஷ்டஈடு வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் முறையான திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதே இதன் மூலம் தெளிவாகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவு 65 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகக் கூறப்படும் வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தின் அண்மைய ஆய்வறிக்கையை அவர் நிராகரித்தார். அரசாங்கத்திற்கு அத்தகைய மக்கள் ஆதரவு இருக்குமாயின், தேவையற்ற காரணங்களைக் கூறாமல் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அவர் சவால் விடுத்தார். மாகாண சபைத் தேர்தலை பழைய முறையிலேயே நடத்துவதற்கு எவ்வித சட்டச் சிக்கலும் இல்லை என்றும், அத்தேர்தலின் மூலம் ஐக்கிய மக்கள் சக்தி தனது பலத்தை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

இறுதியாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள் தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். ஒரு பாரம்பரிய எதிர்க்கட்சி என்பதற்கும் அப்பால் சென்று, சர்வதேச இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடி நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், சிவில் அமைப்புகள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து அவர் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருவதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
 

Leave a Reply