கிரீன்லாந்தில் கனடாவின் புதிய துணைத் தூதரகம்
கனடாவின் வெளிநாட்டு கொள்கையில் பின்பற்றப்படும் “கொள்கைமிக்க நடைமுறை (Principled Pragmatism)” அணுகுமுறை, அடுத்த வாரம் கிரீன்லாந்தில் தெளிவாக வெளிப்படும் என வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
டென்மார்க்கின் ஆட்சிக்குட்பட்ட கிரீன்லாந்தின் தலைநகர் நூக் நகரில் கனடாவின் புதிய துணைத் தூதரகத்தை அவர் திறந்து வைக்க உள்ளார்.
நாம் கொள்கைகளை உறுதியாகக் காக்கும் போதே, அதே நேரத்தில் நடைமுறைபூர்வமாகவும் செயல்படுவோம் என ஆனந்த் கூறினார்.
அவரது அலுவலக மேசையில் ஆர்க்டிக் பகுதியை காட்டும் வட்ட வடிவ வரைபடம் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கிரீன்லாந்தில் புதிய துணைத் தூதரகத்தைத் திறப்பது கடந்த ஆண்டு நவம்பரில் திட்டமிடப்பட்டிருந்தாலும், மோசமான வானிலை காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்றுவது குறித்து மீண்டும் மீண்டும் கடுமையான கருத்துகளை வெளியிட்டு வந்தார்.
அடுத்த வாரம் நடைபெறும் துணைத் தூதரகத் திறப்பு நிகழ்வின் போது, கனடிய கடற்படையின் ஆர்க்டிக் மற்றும் கடல்சார் கண்காணிப்பு கப்பல் ஒன்று நூக் துறைமுகத்தில் தரித்து நிற்கும் என அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டு இதை “போர்க்கப்பல்” என விவரித்த பாதுகாப்புத் துறை, தற்போது இதை “ஆயுதமுள்ள கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான கப்பல்” என குறிப்பிடுகிறது.
இந்த நிகழ்வில் இனூயிட் (Inuit) பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதுடன், கனடாவின் ஆளுநர் ஜெனரல் மேரி சைமன் மற்றும் ஆர்க்டிக் தூதர் விர்ஜீனியா மீர்ன்ஸ் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் இருவரும் இனூயிட் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகும்.























