• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இனி விசா தேவையில்லை - சீன அரசாங்கம் வழங்கிய சலுகை

சுற்றுலா வருமானத்தை அதிகரிக்கும் வகையில், 30 நாட்களுக்கு விசா தேவையில்லை என்ற திட்டத்தை, 75 நாடுகளுக்கு சீனா விரிவு படுத்தியுள்ளது.

சீனாவில், கொரோனா காலத்தின்போது, வெளிநாட்டு பயணியர் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த, 2023ல் இது தளர்த்தப்பட்டபோதும், சுற்றுலா பயணியர் வருகை அதிகரிக்கவில்லை.

கொரோனாவுக்கு முந்தைய, 2019ம் ஆண்டில், 3.19 கோடி வெளிநாட்டு சுற்றுலா பயணியர் சீனாவுக்கு பயணம் செய்தனர். அதே நேரத்தில், 2023ல் இது, 1.38 கோடியாக இருந்தது. இதையடுத்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணியருக்கு, விசா வழங்குவதில் சீனா சலுகைகளை அறிவித்தது.

அதன்படி, 30 நாட்களுக்கு விசா இல்லாமல் சீனாவில் சுற்றிப் பார்க்கலாம். கடந்த, 2023 டிசம்பரில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, மலேஷியா ஆகிய நாடுகளுக்கு முதலில் இந்த சலுகை வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, படிப்படியாக பல நாடுகளுக்கும் இது நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்தாண்டில், 2 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணியர், விசா இல்லாமல் சீனாவுக்கு பயணம் செய்துள்ளனர்.

இது கடந்தாண்டில் வந்த சுற்றுலா பயணியரில், 33 சதவீதமாகும். தற்போது, அஜர்பெய்ஜானுக்கு, வரும், 16ம் திகதி முதல் இந்த சலுகை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. இதன்படி, விசா இல்லாமல் சுற்றுலாப் பயணியர் வருவதற்கான சலுகை, 75 நாடுகளுக்கு வழங்கப்படுகிறது.
 

Leave a Reply