• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

இலங்கை

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பைக் கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இக் கருவியானது பெண் குரங்களின் கருப்பையில் கரு உருவாவதை தடுக்கும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கருவி, ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது.

இச்சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது என்றும் இதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என்றும் பேராசிரியர் அசோக தங்கொல்ல குறிப்பிட்டுள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். இந்த கருவியை பொறுத்துவதற்கு  விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும் என்றும் அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது எனவும் பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply