• Welcome to TamilsGuide
செய்திகள் 1

17 ஆண்டுகளுக்குப் பின் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்ட உமாஓயா திட்டம்

இலங்கை

2007 ஆம் ஆரம்பிக்கப்பட்ட உமா ஓயா திட்டம் 2024 ஆண்டே நிறைவுசெய்யப்பட்ட இதன் பின்னனி குறித்தான தொகுப்பு இதோ!

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் என்றால் என்ன..??

நாட்டின் ஊவா மகாணத்திலுள்ள பதுளை மாவட்டத்தில் இந்த உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தத் திட்ட வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீர்ப்பாசனம் மற்றும் நீர் மின்சார வளாகமாகவே அமைக்கப்பட்டுள்ளது.

இது, உமா ஓய நீர் மின் வளாகம் என்றும் அழைக்கப்படுகின்றது.

இதன் பிரதான நோக்களில் மின்சார உற்பத்தியும் உள்ளடங்குகின்றது.

ஆனால் இந்த திட்டத்தின் சிறப்பு என்பது, விவசாய நிலங்களுக்கான நீர்விநியோகம் மற்றும் குடிநீர் உற்பத்தியாகும்.

இந்த திட்டத்திற்கான ஆரம்ப மதிப்பீடுகள் கடந்த 1989 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

ஈரான் மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இதற்கான ஒப்பந்தததில் கைசாத்திட்டது.

இதனை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி அமைச்சரவை இதற்கு அனுமதி வழங்கியதுடன் திட்டத்திற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

ஆனால் இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

எனினும், உமா ஓயா திட்டத்தின் சுற்றாடல் தாக்க மதிப்பீடு அறிக்கை 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கு பல சுற்றுச்சூழல் அமைப்புக்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தபோதும் இறுதியில் இந்த திட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 16 ஆண்டுகள் தேவைப்பட்டதா..?

 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் ஊழல் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அமைப்புகளும் எதிர்ப்பை வெளியிட்டன.

இந்த திட்டத்தின் செலவு 248 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக 2008 ஆம் ஆண்டு பதவி வகித்த நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் இராஜினாமா செய்திருந்தார்.

இதற்கு எதிராக மக்களால் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் உமா ஓயா திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது.

ஆனால் இன்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து இதனை திறந்து வைத்திருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் பதவி வகிக்கின்ற வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடந்த 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஈரானுக்கு விஜயம் செய்திருந்தார்.

அத்துடன் ஈரானிய வெளிவிவகார அமைச்சருடன் இந்த திட்டம் தொடர்பாக அலி சப்ரி கலந்துரையாடியிருந்தார்.

இதற்கு முன்னர் இந்த திட்டத்திற்கு பல தடைகள் ஏற்பட்டமையால், நாடு நான்கு மணிநேர மின்வெட்டினை எதிர்கொண்டது.

அத்துடன் தனியார் துறையினரிடமிருந்து மின்சாரத்தை அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட நேரிட்டது.

இதனால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன..??

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் என்பது இலங்கையின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும்.

நாட்டின் தென்கிழக்கு பகுதியின் உலர் வலயத்தில் நிலவும் நீர்ப் பற்றாக்குறை இதன்மூலம் நிவர்த்தி செய்யப்படுகின்றது.

குறிப்பாக சுற்றுச் சூழலுக்கும், நீர் மூலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில்,

உமா ஓயாவில் வருடாந்தம் சேருகின்ற 145 கனமீற்றர் நீருக்கு மேலதிகமான நீரை கிரிந்தி ஓயவிற்கு திருப்பிவிடுவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்த திட்டத்தின் ஊடாக மக்களுக்கு கிடைக்கும் முதலாவது நன்மையாக, தேசிய மின்கட்டமைப்பிற்கு 290 கிலோவோட் மின்சாரம் வழங்கபடுகின்றது.

இரண்டாவது பயனாக, மொனராகலை மாவட்டத்தில் 4500 ஹெக்டயர் புதிய விவசாய நிலங்களுக்கும் தற்போதுள்ள 1500 ஹெக்டயர் விவசாய நிலங்களுக்கும் நீர்ப் பாசன வசதி இதன்மூலம் கிடைக்கப்பெறுகின்றது.

மிகப் பிரதானமாக பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டையின் ஆகிய மாவட்டங்களுக்கான குடிநீர் தேவையும் இந்த திட்டத்தின் ஊடாக பூர்த்தி செய்யப்படுகின்றது.

இந்த திட்டத்தில் இரண்டு நீர்த்தேக்கங்களை இணைக்கும் 3.98 கிலோ மீற்றர் நீளமான நீர்ச் சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

இந்த திட்டத்திற்கு ஈரான் அரசாங்கம் நிதியுதவி வழங்கியது ஏன்.? மற்றும் இந்த திட்டத்தை ஈரான் ஜனாதிபதி நேடியாக நாட்டிற்கு வருகை தந்து திறந்து வைப்பதன் பின்னணி என்ன..??

 ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான முறையான இராஜதந்திர உறவுகள் 1962 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

முறையான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாவதற்கு முன்னரே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பேணப்பட்டுள்ளன.

முந்தைய பாரசீக காலத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள், மிக முக்கியமாக ஹோர்மூஸ் நீரிணை வழியாக பேணப்பட்டிருந்தது.

ஈரான் தனது தூதரகத்தை 1975 இல் கொழும்பில் ஆரம்பித்தது.

இலங்கை தனது தூதரகத்தை ஜனவரி 1990 இல் ஈரானிலுள்ள தெஹ்ரானில் ஆரம்பித்தது.

ஈரானின் அபிவிருத்தி உதவிகள் கடன் அடிப்படையிலேயெ வழங்கப்படுகின்றது.

பிரதானமாக உட்கட்டமைப்பு வசதிகள், நீர்ப்பாசனம் மற்றும் வலுசக்தி போன்ற துறைகளை மேம்படுத்துவதில் ஈரான் முக்கிய கவனம் செலுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டம், கடந்த 2008 ஆம் ஆண்டு எப்பிரல் மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட போதும் தாமதம் ஏற்படக் காரணம் என்ன..??

இந்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்த திட்டம் சுமார் 17 ஆண்டுகளின் பின்னர் இன்று செயற்பட ஆரம்பித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்த திட்டமானது அதன் ஆரம்ப அமுலாக்கக் கட்டத்தை நிறைவு செய்திருந்தது.

திட்டதின் முதலாம் இரண்டாம் அலகுகள் தேசிய மின் கட்டமைப்புடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் சோதனைச் செயல்பாடுகள் 2024 ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி வெற்றிகரமாக செயற்படுத்தப்படிருந்தது.

உமா ஓய திட்டத்தில் இரு பெரிய இயந்திரங்களுக்கு பெண்களின் பெயர் சூட்டப்பட்டது ஏன்?

இந்த உமா ஓய திட்டத்தில் 60 மெகாவோட்ஸ் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் உற்பத்தி இயந்திரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த திட்டத்தில் பணியாற்றிய இரண்டு பெண்களை பெருமைப்படுத்தும் நோக்கில் நீர்மின் உற்பத்தி இயந்திரங்களுக்கும் பெண்களின் பெயர்களை சூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு இயந்திரத்திற்கு தசுனி என்றும் மற்றைய இயந்திரத்திற்கு சுலோச்சனா என்றும் பெயரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான உணவு மற்றும் நீராகாரங்களை சுமார் 300 மீற்றர் ஆழத்தில் இருந்து இரண்டு பெண்களும் தயாரித்து வழங்கியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் சேவையினை பாராட்டும் வகையில், இரண்டு மின்உற்பத்தி இயந்திரங்களுக்கும் தொழிலாளர்களின் பெயர்கள் சூட்டப்பட்டதாக உமா ஓய மின் உற்பத்தி நிலையத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதியின் வருகை!

 ஈரான் ஜனாதிபதி காலை இன்று 10.30 மணியளவில் இலங்கையை வந்தடைந்தார்.

மத்தள சர்வதேச விமான நிலையத்தினுடாக நாட்டை வந்தடைந்த அவரை பிரதமர் தினேஷ் குணவர்தன வரவேற்றிருந்தார்.

இதன்போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமைச்சர் மஹிந்த அமரவீர, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இராணுவ மரியாதைக்கு மத்தியில் சிவப்பு கம்பளத்தில் வருகை தந்த ஈரான் ஜனாதிபதி, மத்தள விமான நிலைய வளாகத்தில் உள்ள விசேட நினைவுப் புத்தகத்தில் குறிப்பு ஒன்றையும் பதிவு செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து, உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு நாட்டில் இன்று விசேட பாதுகாப்பு நடைமுறைகளும் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

ஈரான் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என்பதும் விசேட அம்சமாகும்

இத் திட்டம் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவின் சின்னம் மட்டுமல்ல என்றும், ஆசிய நாடுகளுக்கு இடையே அதிகபட்ச ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கான உத்தரவாதமென இதன்போது  ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

திறந்து வைக்க்கப்பட்ட உமாஓயா திட்டம்!

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இன்று காலை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் கலந்து கொண்ட ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வரவேற்கப்பட்டார்.

இருநாட்டு தலைவர்களும் இணைந்து நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தனர்.

ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி ஆகிய இருவரும் இணைந்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின் உற்பத்தி இயந்திரங்களை இயக்கி திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இன்று தொடக்கம் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் விஜயத்தை நிறைவு செய்து கொண்டு ஈரான் ஜனாதிபதி இன்று மாலை நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply