• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இசைக்குயில் - 2024

கனடா

ரொரன்ரோவில் தமிழோசை சிறீ என்று அறியப்படும் சிறீகந்தா ஏற்பாடு செய்து நடத்திய ‘இசைக்குயில் - 2024’ என்னும் கனேடிய இளம் பாடகர்களுக்கான போட்டி நிகழ்ச்சிக்கு சென்ற சனிக்கிழமை (04.13.2024) சென்றிருந்தேன்.

ரொரன்ரோவில் கடந்த 33 ஆண்டுகளாக என்மீது என்றும் மாறாத அன்புடன் பழகுபவர் சிறீகந்தா.  1991ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அப்போதுதான் கனடாவுக்குக் குடிபெயர்ந்திருந்த சிறீகந்தா, எனது சகோதரர் P. ஞானேஸ்வரன் ஆரம்பித்து நடத்திய ‘தேமதுரம்’ வானொலி நிகழ்ச்சியில் இணைந்து அவருக்கு நிகழ்ச்சித் தயாரிப்பில் உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார். 

தேமதுரம் நிகழ்ச்சியில் பிரதான அறிவிப்பாளர்களாகப் பங்குபற்றிய கமலா தம்பிராஜாவுக்கும் எனக்கும்  ஒலி, ஒளிபரப்புத் துறைகளில் மூத்தவர்கள் என்றவகையில் மிகுந்த மரியாதை தருபவர் சிறீகந்தா.  

பின்னர் எனது சகோதரர் தேமதுரம் நிகழ்ச்சியை நிறுத்திவிடவே ‘தமிழோசை’ என்னும் பெயரில் வானொலி நிகழ்ச்சியொன்றை ஆரம்பித்த சிறீகந்தா அதைப் பலவருடங்கள் தொடர்ந்து செய்ததால் ‘தமிழோசை சிறீ’ என்று தமிழ் மக்களிடையே அறியப்படுகிறார்.

தமிழோசை வானொலிச்சேவை ஆரம்பித்தவுடன் சிறீகந்தா என்னிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதிலே செய்தி வாசிப்பவராக சிலகாலம் பணியாற்றினேன். 

 தமிழோசை வானொலிக்கென நான் தயாரித்த ‘வாழ்ந்து பார்க்கலாம்’ என்ற தொடர்நாடகம், பின்னர் நூலுருவிலும் வெளியிடப்பட்டது.  நாடகத் தயாரிப்பில் எனக்கு சகல உதவிகளையும் செய்து, எவ்வித சிரமமுமின்றி நான் அதைத் தயாரிப்பதற்கு உதவியவர் சிறீகந்தா.  நான் அண்மையில் வெளியிட்ட எனது ஊடக அனுபவங்களை விபரிக்கும் ‘நினைவு நல்லது’ நூலில் இவைபற்றியெல்லாம் விபரமாகப் பதிந்துள்ளேன்.

தமிழோசை சிறீ பின்னர் ரொரன்ரோவில் இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவராக, பிரபல இந்திய இசைக்கலைஞர்களை அழைத்தும் ரொரன்ரோ தமிழ் இசைக்கலைஞர்களைக்கொண்டும் பல நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து செய்துவருகிறார்.  

அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தவறாது என்னை அவர் அழைத்தாலும் எல்லாவற்றுக்குமே என்னால் செல்லமுடிவதில்லை.  ஒருசிலவற்றுக்கு மட்டுமே சென்றிருக்கிறேன்.  

இவ்வாறு இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தும் மிகச் சிரமமான பணியை எத்தனையோ கஷ்டங்களுக்கு முகம்கொடுத்தும் தொடர்ந்து செய்துவரும் சிறீகந்தாவைப் பார்த்து, “சிறீக்கு ஏன் இந்த வேலை” என்று அனுதாபப்படுவதுண்டு.  இருந்தபோதும் அவரது விடாமுயற்சியையும் கலைகள்மீதும் கலைஞர்கள்மீதும் அவர் காட்டும் ஈடுபாட்டையும்கண்டு நான் வியப்பதுமுண்டு. 

இம்முறை சிறீகந்தா ஒழுங்குசெய்து நடத்திய இசைக்குயில் - 2024 என்ற நிகழ்ச்சிக்குச் சென்று, அதை இறுதிவரை பார்த்து, சிறீகந்தா கேட்டுக்கொண்டதற்கிணங்க வெற்றிபெற்றவர்களுக்கு மேடையில் பரிசளித்துவிட்டு வந்தேன்.

சிறீகந்தாவுக்கு நல்ல ஆளுதவியும் அனுசரணையாளர்களின் ஆதரவும் இருந்தால் எமது இளைஞர்களை ஊக்குவிக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை மேலும் சிறப்பாகச் செய்யமுடியும்.  இத்தகைய இசைப்போட்டி நிகழ்ச்சிகள் எமது இளைஞர்களின் திறமையை வளர்ப்பதோடு, அவர்களை நம் சமூகத்துடன் இணைத்து வைத்திருக்கும் முக்கிய பணியையும் செய்வதால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் கனடாவாழ் தமிழ்மக்களுக்கு மிகவும் அவசியமானவை.  

நிழற்படங்கள்
நன்றியுடன் 
ஐயா 4U

P Wikneswaran Paramananthan

Leave a Reply