• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செல்வராஜுக்கும், ராஜாவுக்கும் சந்திப்பு எப்படி நடந்தது

சினிமா

அன்னக்கிளி படத்தில் இசையமைக்க பஞ்சு அருணாச்சலத்திடம் இளையராஜாவுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் கதாசிரியர் செல்வராஜ் என்பது சிலருக்கு தெரியும். ஆனால், செல்வராஜுக்கும், ராஜாவுக்கும் சந்திப்பு எப்படி நடந்தது, முதல் பட வாய்ப்பை பெறுவதற்கு ராஜா எவ்வளவு சிக்கல்களை சந்தித்தார் என்பது பலருக்கும் தெரியாது.

கம்யூனிஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான சங்கரய்யாவின் சகோதரர் மகன்தான் ஆர்.செல்வராஜ். 1970களில் கம்யூனினிஸ்ட் கூட்டம் எங்கு நடந்தாலும் அங்கே பாவலர் வரதராஜரின் இசைக்கச்சேரி நடக்கும், பாவலரின் சகோதரர்களான ராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகிய மூவரும் அதில் தவறாமல் இடம் பெற்றிருப்பார்கள்.

அவர்கள் மூவரும் மதுரை வரும்போதெல்லாம் மங்கம்மாள் சத்திரத்தில் தங்குவது வழக்கம். அங்குதான் ஆர்.செல்வராஜுக்கும், ராஜாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன்பின் செல்வராஜ் சென்னை சென்று கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்திடம் உதவியாளராக சேர்ந்தார். ஒருபக்கம், 1969ம் வருடம் தனது 26 வயதில் சென்னை வந்தார் ராஜா. 

அப்போது நாடகங்களை நடத்திக்கொண்டே சினிமாவில் நுழைய முயன்ற தனது நண்பர் பாரதிராஜாவுடன் தங்கி இருந்தார் ராஜா. மேலும், கர்நாடக இசை, தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய இசை, பியானோ, கிடார் போன்ற இசைக்கருவிகளை கற்றிருந்த ராஜா பாரதிராஜாவின் நாடகங்களில் கிடார் வாசித்துகொண்டிருந்தார்.

அதன்பின் இசையமைப்பாளர்கள் தட்சணாமூர்த்தி, ஜி.கே வெங்கடேஷ் போன்றோரிடம் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. எப்படியாவது இசையமைப்பாளர் ஆகிவிட வேண்டும் என்கிற முனைப்பில் இருந்தார் ராஜா. தனது தம்பிக்காக பல சினிமா கம்பெனிகளிலும் நேரில் சென்று வாய்ப்பு கேட்டார் ராஜாவின் அண்ணன் பாஸ்கர். அவருடன் கதாசிரியர் செல்வராஜும் போவார்.

ஒருநாள், ‘சினிமாவின் இசையை புரட்டிப்போடும் ஒரு இசையமைப்பாளரை அறிமுகப்படுத்த ஆசைப்படுகிறேன்’ என செல்வராஜிடம் பஞ்சு அருணாச்சலம் சொல்ல, இதுதான் சந்தர்ப்பம் என காத்திருந்த செல்வராஜ் ராஜாவை பற்றி சொல்ல ஆர்வமான பஞ்சு அருணாச்சலம் அடுத்தநாள் அவரை நேரில் அழைத்து வர சொன்னார். 

அடுத்தநாள் அருணாச்சலத்தின் முன் ராஜாவை நிறுத்தினார் செல்வராஜ். பட்டு வேட்டி, சட்டை, நேற்றில் பட்டை, குங்குமம், கையில் ஆர்மோனிய பெட்டியுடன் ஒருவர் வருவார் என எதிர்பார்த்த அருணாச்சலம் அரசு அதிகாரிபோல பேண்ட், சர்ட் அணிந்து வெறுங்கையுடன் சென்றிருந்த ராஜாவை பார்த்ததும் ‘செல்வராஜ் நம்மை ஏமாற்றிவிட்டார்’ என்றே நினைத்தார். ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ராஜாவிடம் பேச்சுக்கொடுத்தார்.

அப்போது அன்னக்கிளி உன்னை தேடுதே பாடலை அங்கிருந்த டேபிளை தட்டிக்கொண்டே ராஜா அவரிடம் பாடிக்காட்டினார். மேலும், மச்சான பாத்தீங்களா என அடுத்த பாடலை பாடிக்கட்டினார். அருணாச்சலத்திற்கு ராஜா யார் என்பது புரிந்துவிட்டது. சொல்லி அனுப்புகிறேன் என சொல்லி ராஜாவை அனுப்பிவிட்டார்.

அருணாச்சலம் தனக்கு வாய்ப்பு வாங்கி கொடுப்பார் என ராஜா நம்பவில்லை. இது ஒன்றும் அவருக்கும் புதிதும் அல்ல. பல சினிமா கம்பெனிகளில் இப்படி பாடிக்காட்டி நிராகரிக்கப்பட்டிருக்கிறார் அவர். அவர் நினைத்தது போலவே, அருணாச்சலம் கதை எழுதி அப்போது உருவான துணிவே துணை, மயங்குகிறாள் ஒரு மாது படங்களில் வேறு இசையமைப்பாளர் பெயர் இருந்தது. ஏமாந்து போனார் இளையராஜா. இதற்கிடையில் 2 படங்களில் 2 பாடல்களுக்கு ராஜா இசையமைத்து அந்த படமே வெளிவரவில்லை.
 

Leave a Reply