• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சைக்கிளில் சுற்றிய என் வீட்டு வாசலில் 10 கார்கள் நிற்க காரணம் அந்த நடிகர் தான் - யாரை சொன்னார் டி.எம்.எஸ்?

சினிமா

தனது வெண்கல குரலின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள பாடகர் டி.எம்.சௌந்திரராஜன் தனது வாழ்க்கையை உயரத்திற்கு கொண்டு சென்ற நடிகர் குறித்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வெண்கலகுரல் மன்னன் என்று போற்றப்படும் டி.எம்.சௌந்திரராஜன், சினிமாவில் பாடகராக வாய்ப்பு கிடைத்தாலும், ஒரு சில பாடல்கள் மட்டுமே பாடிக்கொண்டிருந்த சைக்கிளில் சென்றுகொண்டிருந்த என் வீட்டு வாசலில் 10 கார்களை நிறுத்த உதவியர் இந்த நடிகர் என்று கூறியுள்ளார்.

1954-ம் ஆண்டு ஆர்.எம்.கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளியான படம் தூக்கு தூக்கி. சிவாஜி, லலிதா பத்மினி ஆகியோர் இணைந்து நடித்திருந்த இந்த படத்திற்கு, ஜி.ராமநாதன் இசையமைத்துள்ளார். அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆருக்கு சீர்காழி கோவிந்தராஜனும், சிவாஜிக்கு சி.எஸ்.ஜெயராமனும் பாடிக்கொண்டிருந்தனர். இதன் காரணமாக ஓரிரு பாடல்கள் மட்டுமே டி.எம்.எஸ்க்க்கு கிடைத்துள்ளது.

அதேபோல் எம்.ஜி.ஆர் சிவாஜி இருவரும் இணைந்து நடித்த ஒரே படமாக கூண்டுக்கிளி படத்தில் 4 பாடல்கள் பாடியிருந்தார். இதனிடையே தூக்கு தூக்கி படத்தில் பாடுவதற்காக டி.எம்.எஸ்.க்கு வாய்ப்பு கிடைத்து அவரும் பாடல் பதிவுக்காக சென்றுள்ளார். 1952-ம் ஆண்டு பராசக்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக சிவாஜிக்கு, சி.எஸ்.ஜெயராமன் தான் பாடல்கள் பாடி வந்துள்ளார். ஆனால் இந்த படத்தில் பாடுவதற்காக அவர் அதிக சம்பளம் கேட்டதால், படக்குழு டி.எம்.எஸ்க்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.

இந்த பாடலை பாட வந்தபோது, சிவாஜி, எனக்கு சி.எஸ்.ஜெயராமன் தான் பாடிக்கொண்டிருக்கிறார். அவர் பாடினால் தான் நன்றாக இருக்கும் வேறு பாடகர்கள் வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியான படக்குழுவினர் இதை டி.எம்.எஸிடம் சொல்ல, இந்த படத்தில் பாட வேண்டும் என்று விதி இருந்தால் பாடுகிறேன் என்று சொல்லிவிட்டு, நான் இந்த படத்தில் 3 பாடல்கள் இலவசமாக பாடி தருகிறேன். அதை நீங்கள் சிவாஜியிடம் போட்டு காட்டுங்கள். அவர் சம்மதம் சொன்னால் பாடுகிறேன்.

மாறாக சிவாஜி இந்த பாடல் பிடிக்கவில்லை என்று சொன்னால், எனக்கு தெரிந்த வேலையை பார்த்துக்கொள்கிறேன் பாடமாட்டேன் என்று கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட படக்குழு, டி.எம்.எஸ் குரலில் 3 பாடல்களை பதிவு செய்து அதை சிவாஜிக்கு போட்டு காட்டியுள்ளனர். முதலில் சாதாரணமாக கேட்க தொடங்கிய சிவாஜி பின்னர் பாடலை தாளம் போட்டு பாடலை ரசிக்க தொடங்கியுள்ளார். பாடல் முடிந்த பின் இதை யார் பாடியது என்று கேட்க, மதுரையில் இருந்து வந்திருக்கிறார் பெயர் சௌந்திரராஜன் என்று அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.

அப்போது டி.எம்.எஸ்ஐ அழைத்த சிவாஜி, நல்ல பாடியிருக்கீங்க, இந்த படத்தில் மற்ற அனைத்து பாடல்களையும் நீங்களே பாடுங்க  என்று கூறியுள்ளார். 11 பாடல்கள் உள்ள இந்த படத்தில் 8 பாடல்களை டி.எம்.எஸ். பாடியிருந்தார். இந்த படம் வெற்றியடைந்து டி.எம்.எஸ்.க்கு நல்ல பெயரை பெற்று தந்த நிலையில், இதுவரை வாடகை சைக்கிளில் சென்றுகொண்டிருந்த டி.எம்.எஸ். வீட்டை நோக்கி தயாரிப்பாளர்கள் கார்கள் படையெடுக்க தொடங்கியுள்ளது.

தனது வாழ்க்கை தூக்கு தூக்கி படத்திற்கு முன் பின் என்று இரண்டாக பிரிக்கலாம் என்று டி.எம்.சௌந்திரராஜன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply