• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஃபா மீது தாக்குதல் நடத்தப்படும் என்கிறார் நேதன்யாகு

ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. ஆறுமாதங்களை தாண்டியும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

முதலில் காசா முனையின் வடக்குப் பகுதியில்தான் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆனால் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிப்பதற்கு தெற்கு பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என தென்பகுதியிலும் தரை தாக்குதலை விரிவுப்படுத்தியது.

ஹமாஸ் அமைப்பின் வலுவான இடமாக கருதப்பட்ட கான் யூனிஸ் மீது தாக்குதல் நடத்தியது. அந்த நகரத்தை இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு துவம்சம் செய்துவிட்டது. ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த சுரங்கப்பாதைகளை அழித்தது.

இந்த நிலையில்தான் ரஃபா மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாகவும், ரஃபா மீது தாக்குதல் நடத்தினால்தான் ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போரின் இலக்கு நிறைவடையும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்திருந்தார்.

ஆனால் ரஃபாவில் வசித்து வரும் 1.4 மில்லியன் பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் அமெரிக்கா ரஃபா தாக்குதலை விரும்பவில்லை. பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 7-ந்தேதி) கான் யூனிஸ் நகரில் இருந்து ராணுவ துருப்புகளை திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்தது. இதனால் கான் யூனிஸ் நகருக்கு மக்கள் திரும்பிய வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் நேதன்யாகு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் "அது நடக்கும் (ரஃபா மீது தாக்குதல்). தேதி இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் விரிவாக ஏதும் தெரிவிக்கவில்லை.

அதேவேளையில் இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா, ரஃபா மீதான தரைவழி தாக்குதல் தவறானதாக இருக்கும். மக்களை பாதுகாப்பதற்கான நம்பகத்தன்மையான திட்டத்தை பார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான சர்வதேச முயற்சிகள் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் கெய்ரோவில் விவாதித்து வரும் நிலையில் நேதன்யாகு இவ்வாறு பேசியுள்ளார்.

காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 33,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

ரஃபா மீது தரைவழி தாக்குதலை நடத்த ராணுவத்தை ஒருங்கிணைப்பதற்காக கான் யூனிஸ் நகரில் இருந்து ராணுவம் வெளியேறியுள்ளது என இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply