• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்ஜிஆர், சிவாஜியை விட அதிக சம்பளம்.. தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி டிஆர் ராஜகுமாரி..!

சினிமா

எம்ஜிஆர், சிவாஜியை விட அதிகம் சம்பளம் வாங்கியவர், தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி  மற்றும் சென்னையில் முதன் முதலாக தியேட்டர் வாங்கிய நடிகை ஆகிய புகழுக்கு சொந்தக்காரர் நடிகை டிஆர் ராஜகுமாரி.

நடிகை டிஆர் ராஜகுமாரி தமிழ்நாட்டில் உள்ள தஞ்சையை சேர்ந்தவர். 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர் சென்னைக்கு சிறுவயதிலேயே வந்துவிட்டார். டிஆர் ராஜகுமாரியின் குடும்பமே கலைக்குடும்பம் என்பதால் இவர் சினிமாவில் நடிப்பதில் எந்த விதமான சிரமமும் இல்லை.

டிஆர் ராஜகுமாரியின் பாட்டி ஒரு பிரபல பாடகியாக இருந்தார். அதேபோல் டிஆர் ராஜகுமாரியின் சகோதரி தனலட்சுமி என்பவர் அந்த காலத்தில் பிரபல நடிகையாக இருந்தார். அவருடைய மகள்கள் தான் ஜோதிலட்சுமி, ஜெயமாலினி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டிஆர் ராஜகுமாரி சகோதரர் டிஆர் ராமண்ணா பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார்.

இந்த நிலையில் தான் டிஆர் ராஜகுமாரி கடந்த 1939 ஆம் ஆண்டு நடிகை ஆக அறிமுகமானார்.  முதல் படம் தோல்வி அடைந்ததால் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அதன் பிறகு அவர் ’மனோன்மணி’, ’சிவகவி’ ஆகிய திரைப்படங்களில் நடித்த நிலையில் அந்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்களாகிய பியூ சின்னப்பா மற்றும் எம்கே தியாகராஜ பாகவதர் ஆகிய இருவருக்கும் ஜோடியாக டிஆர் ராஜகுமாரி மாறி மாறி நடித்ததால் அவருக்கு ரசிகர்கள் குவிந்தனர்.

இந்த நிலையில்தான் டிஆர் ராஜகுமாரியின் திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் ’சந்திரலேகா’ என்ற திரைப்படம் வந்தது. எஸ்எஸ் வாசனின் ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் டப்பிங் செய்து வெளியானது. இதனால் உலக அளவில் டிஆர் ராஜகுமாரி பெயர் பரவியது.  குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற டிரம்ஸ் நடனம் இன்றும் பிரமிக்க வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜியுடன் ’தங்கப்பதுமை’, ’அன்பு’, ’மனோகரா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். குறிப்பாக ’மனோகரா’ திரைப்படத்தில் வசந்த சேனை என்ற வில்லி கேரக்டர் சிவாஜியின் நடிப்பை மிஞ்சும் அளவுக்கு இருக்கும்.

மேலும் எம்ஜிஆர், சிவாஜி இணைந்து நடித்த ஒரே படமான ’கூண்டுக்கிளி’ என்ற  படத்தை தயாரித்தது டிஆர் ராஜகுமாரி என்பதும் இயக்கியது அவருடைய சகோதரர் டிஆர் ராமண்ணா என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்தது. ஆனால் அதே நாளில் டிஆர் ராஜகுமாரி தயாரிப்பில் வெளியான ’தூக்கு தூக்கி’ படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பதால் அவர் ’கூண்டுக்கிளி’ தோல்வி குறித்து கவலைப்படவில்லை.

எம்.ஜி.ஆருக்கு சகோதரியாக ’பெரிய இடத்துப் பெண்’ என்ற படத்தில், எம்ஜிஆருக்கு அம்மாவாக ’பாசம்’ படத்தில் டி.ஆர்.ராஜகுமாரி நடித்திருந்தார். மேலும் கவியரசு கண்ணதாசன் தயாரித்த ‘வானம்பாடி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த கமல்ஹாசனுக்கு அம்மாவாக டிஆர் ராஜகுமாரி நடித்திருந்தார்.

சென்னையில் முதன் முதலாக தியேட்டர் வாங்கிய தமிழ் நடிகை டிஆர் ராஜகுமாரிதான். சென்னை பாண்டி பஜாரில் உள்ள பிரபலமான இடத்தில் அவருடைய தியேட்டர் இருந்தது. அந்த தியேட்டரில் தான் அந்த காலத்தில் உள்ள நட்சத்திரங்கள் வந்து படம் பார்ப்பார்கள். ஆனால் இப்போது அந்த தியேட்டர் ஒரு வணிக வளாகமாக மாறிவிட்டது.

தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி என்ற பெயர் பெற்ற டிஆர் ராஜகுமாரியை திருமணம் செய்ய பல கோடீஸ்வரர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர் கடைசி வரை திருமணம் செய்யவில்லை. அதற்கு காரணம் அவர் ஒரு பிரபல நடிகருடன் காதலில் இருந்தார் என்றும் ஆனால் அந்த நடிகர் திடீரென இறந்து விட்டதால் அதன் பிறகு அவர் யாரையும் திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

தமிழ் சினிமாவின் கனவுக்கன்னி, தமிழ் சினிமாவின் தேவதை என்று புகழப்பட்ட டிஆர் ராஜகுமாரி கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் மறைந்தாலும், அவரது புகழ் தமிழ் சினிமா உள்ளவரை  இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply