• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மசாஜ் நிலையங்களுக்கும், ஆயுர்வேதத் துறைக்கும் தொடர்பு இல்லை

இலங்கை

”நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள மசாஜ் நிலையங்களுக்கும், உள்ளூர் மருத்துவ அமைச்சு மற்றும் ஆயுர்வேத துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை” என சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  ஆயுர்வேத மருத்துவத் துறையானது நாட்டின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கக்கூடிய ஒரு தனித்துவமான துறையாகும். உள்ளூர் மருத்துவ முறையில் கிடைக்கும் மசாஜ் முறைகளில் சுற்றுலாப் பயணிகள் தனி விருப்பமும் ஆர்வமும் கொண்டுள்ளனர்.

இங்கு, ஆயுர்வேத துறையின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும், பொடி மந்த்ரா என்ற மசாஜ் மையங்களை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தொழில் தகைமைகளுடன் பயிற்றுவிக்கப்பட்ட விருந்தோம்பல் சேவைகளை வழங்கும் நோக்கில் பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

எனினும், நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள ஸ்பாக்களுக்கும் உள்ளூர் மருத்துவ அமைச்சு மற்றும் ஆயுர்வேத துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆயுர்வேத திணைக்களம் ஸ்பாக்களுக்கு உரிமம் வழங்குவதில்லை என்பதை இங்கே கூற வேண்டும்.

ஆயுர்வேதத் துறையில் பதிவுசெய்யப்பட்ட மசாஜ் நிலையங்களை நாங்கள் முறையாக ஒழுங்குபடுத்துகிறோம்.

மேலும், சட்ட நடவடிக்கை காரணமாக சுதேச மருத்துவத் துறைக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் தொடர்பாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு நாம் எழுத்து மூலம் அறிவித்துள்ளோம்.

போதைப்பொருள் பற்றாக்குறையால் போதைக்கு அடிமையான சிலர் சுதேச மருந்துகளை மாற்றீடாக எடுத்துக்கொள்கின்றனர்.

எனவே உள்ளூர் மருந்துகளை தடையின்றி உற்பத்தி செய்வதற்கு இடமளிக்குமாறு அரசாங்கத்தை கோரியுள்ளோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply