• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கரை ஒதுங்கிய அந்த மீன்- தைவானை உலுக்கிய மோசமான நிலநடுக்கம்

பேரழிவிற்கு முன்னர் விசித்திரமான ஆழ்கடல் மீன் ஒன்று பொதுமக்கள் கண்ணில் படும் என்ற தைவான் மக்களின் நம்பிக்கை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தைவான் நாட்டை மொத்தமாக உலுக்கிய மிக மோசமான நிலநடுக்கத்தை குறித்த மீன் கணித்திருக்கலாம் என்றே கூறுகின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் தீவு நாடான தைவான் எதிர்கொண்டிராத மிக மோசமான நிலநடுக்கத்தை புதன்கிழமை பகல் எதிர்கொண்டுள்ளது.
  
இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில் 10 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000 கடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையிலேயே ஆழ்கடலில் மட்டும் காணப்படும் துருப்பு மீன் ஒன்று பேரழிவுக்கு சற்று முன்பு அண்டை நாடான பிலிப்பைன்ஸில் பிடிபட்டுள்ளது. பொதுவாக துருப்பு மீன்கள் கடலுக்கடியில் 3,300 அடி ஆழத்தில் காணப்படுபவை.

ஆனால் ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளின்படி, நிலநடுக்கம் போன்ற பேரழிவுக்கு முன்னர், குறித்த மீனானது கடலின் மேற்பரப்பில் வந்துவிடும் என்றே நம்பப்படுகிறது. தற்போது நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் இருந்து தெற்கே 900 மைல் தொலைவில் உள்ள கலங்கமன் தீவு அருகே மீன் பிடிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மீன் சிக்கியுள்ளது. அதாவது நிலநடுக்கம் ஏற்படுவதற்கும் சரியாக 30 மணி நேரத்திற்கு முன்னர். துருப்பு மீன் சிக்கியது கெட்ட சகுனம் என்றாலும், தைவான் நிலநடுக்கம் ஏற்பட்டது பகலில் என்பதால் உயிர் அபாயம் அதிகமில்லை என மீனவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, இதுவரை தாம் இந்த கதைகளை நம்பவில்லை என்றும், தற்போது நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அது துருப்பு மீன் என அறியாமலே மீனவர்கள் பிடித்துள்ளனர். சுமார் 15 கிலோ எடை இருக்கும் என்றே கூறப்படுகிறது.

ஆனால் துருப்பு மீனுக்கும் நிலநடுக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றே அறிவியல் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 
 

Leave a Reply