• Welcome to TamilsGuide
செய்திகள் 1

4000 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை

இலங்கை

நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருக்கும் நிலையில், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது 2 ஆயிரத்து 320 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்தது. மூன்று வருடங்களின் பின்னர் 2024 ஆம் ஆண்டில் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் பட்சத்தில், அடுத்த வருடமும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேலதிக நிதி ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது”  நீங்கள் ஒரு வகுப்பறையை மாத்திரம் பொறுப்பேற்கவில்லை. அந்த வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை தான் நீங்கள் பொறுப்பேற்கிறீர்கள்.

05 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவர்கள் உங்களுடன் தமது நேரத்தை செலவிடுகிறார்கள். அதனால்தான் அவர்கள் வீட்டில் இருந்து பெறும் வழிகாட்டுதலைப் போன்றே பாடசாலையிலிருந்து அவர்கள் பெறும் வழிகாட்டுதலும் மிகவும் முக்கியமானது. அந்தப் பொறுப்பை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். மாணவர்களுக்கு பாட அறிவை மட்டும் கொடுக்க வேண்டியதில்லை. இந்த மாணவர்களின் வாழ்க்கையை நீங்கள்தான் வடிவமைக்க வேண்டும்.

இன்று, இணையத்தில் பாட அறிவை பெறலாம். ஆனால் மாணவர்களின் குணாதிசயத்தை கட்டியெழுப்ப இணையத்தால் முடியாது. நம் அனைவரின் வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதில் பெற்றோரிடமிருந்து பெற்ற வழிகாட்டுதலைப் போன்றே ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது. அதனால்தான் ஆசிரியர் தொழில் உயர் தொழிலாகக் கருதப்படுகிறது. அந்த மரியாதையை பாதுகாக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply