• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிப்பிற்கே இலக்கணமாகி போனவர் செவாலியர் சிவாஜி கணேசன்

சினிமா

சிறு வயது முதல் பல நாடகங்களிலும் நடித்து பின்னர் பராசக்தி படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கி நடிப்பிற்கே இலக்கணமாகி போனவர் செவாலியர் சிவாஜி கணேசன். அவருக்கு பின்னால் நடிக்க வந்த நடிகர்களுக்கு நடிப்பில் பல்கலைக்கழகமாக இருந்து எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்தவர். ஆனால், அவருக்கே ஒரு இயக்குனர் நடிப்பது எப்படி என சொல்லிக் கொடுத்த சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் சிவாஜி நடித்த திரைப்படம் பேசும் தெய்வம். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒரு காட்சியில் சிவாஜி நடித்ததில் இயக்குனருக்கு திருப்தி இல்லை. ‘ஒன் மோர்’ என்றார். சிவாஜி மீண்டும் நடிக்கிறார். இயக்குனர் ‘ஒன் மோர்’ என்கிறார். இப்படி 6 முறை சிவாஜி நடித்தும் இயக்குனருக்கு திருப்தி இல்லை.

உடனே கோபாலகிருஷ்ணனின் அருகில் வந்த சிவாஜி ‘இந்த காட்சியில் எனக்கு தெரிந்தவரை எல்லாம் நடித்துவிட்டேன். உனக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை. நீ நடித்துக்காட்டு’ என்கிறார். உடனே கோபாலகிருஷ்ணன் அந்த காட்சியில் சிவாஜி நடிக்க வேண்டும் என நடித்துக்காட்டுகிறார். அதைப்பார்த்த சிவாஜி ‘சரி நான் வருகிறேன்’ என சொல்லிவிட்டு காரில் ஏறி வீட்டுக்கு போய்விட்டார்.

படப்பிடிப்பில் இருந்த எல்லோருக்கும் அதிர்ச்சி. கோபால கிருஷ்ணனின் தம்பி ஓடி வந்தார். ‘நீ இப்படி செய்யலாமா? சிவாஜிக்கே நீ நடிப்பு சொல்லி கொடுக்கிறியா?. நீ என்ன பெரிய நடிகனா?.. இன்றோடு இந்த படத்தின் படப்பிடிப்பு முடிகிறது. நாளைக்கு சிவாஜி வேறு ஒரு படத்திற்கு நடிக்கபோகிறார். இனிமேல் அவரின் கால்ஷீட் வேண்டுமெனில் 3 மாதம் காத்திருக்க வேண்டும். இன்று இந்த காட்சி முடிந்திருந்தால் நாளை முதல் ரிலீஸ் தொடர்பான மற்ற வேலைகளை பார்க்கலாம்’ என திட்ட துவங்கிவிட்டார்.

அன்று இரவு கோபால கிருஷ்ணனுக்கு தூக்கம் வரவில்லை. நாம் என்ன தவறு செய்தோம்?. ஒரு காட்சியில் சிவாஜி நடித்ததில் திருப்தி இல்லாததால் திரும்ப திரும்ப நடிக்க சொன்னேன். அவர் நடித்து காட்ட சொல்லவும் நடித்து காட்டினேன். இதில் என்ன தவறு?’ என தூக்கம் வராமல் யோசித்துகொண்டிருந்தார். 

சரியாக 12 மணிக்கு அவருக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. சிவாஜி நாளை காலை 11 மணிக்கு வேறு படத்தின் படப்பிடிப்புக்கு போகிறார் எனவே காலை 7 மணிக்கு உங்கள் படத்தில் நடிக்க வருகிறார். ஏற்பாடுகளை செய்யுங்கள்’ என சொன்னார்கள். அப்போதுதான் இயக்குனருக்கு நிம்மதி ஏற்பட்டது.

அடுத்தநாள் காலை 7 மணிக்கு மேக்கப்புடன் வந்தார் சிவாஜி. மேலும், நடிப்பில் பிச்சி உதறினார். அவர் நடித்து முடித்ததும் ஓடோடிப்போய் அவரை கட்டியணைத்துகொண்டார் கோபாலகிருஷ்ணன். இதைத்தான் நேற்று நான் கேட்டேன்.. நீங்கள் நடிக்கவில்லை’ என சொல்ல சிவாஜியோ ‘நேற்று நான் கோபப்பட்டு இங்கிருந்து போய்விட்டதாக எல்லோரும் நினைத்திருப்பீர்கள்’.

எனக்கு எந்த கோபமும் இல்லை. இவ்வளவு படங்கள் நடித்தும் இவர் எதிர்பார்த்தது எனக்கு ஏன் வரவில்லை எனக்குள் ஒரே குழப்பம். நேற்று இரவு கண்ணாடி முன்பு 20 முறையாவது நீ நடித்து காட்டியது போல நடித்து பயிற்சி எடுத்தேன். இதைப்பார்த்த என் மனைவி ’என்னாச்சி உங்களுக்கு இப்போதுதான் நடிக்க வந்தது போல பயிற்சி எல்லாம் எடுக்கிறீங்க?’ என கேட்டார். எனக்கு முழு திருப்தி ஏற்பட்ட பின்னரே உனக்கு போன் செய்து நாளைக்கு ஷூட்டிங் வைக்க சொன்னேன்’ என சொல்ல ஆச்சர்யப்பட்டுப்போனார் கோபாலகிருஷ்ணன்.
 

Leave a Reply