• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கைது செய்யப்படுபவர்கள் மீதான சித்திரவதைகள் தொடர்பான அறிக்கை ஐநாவில் கையளிப்பு

இலங்கை

நாட்டில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினால் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது அமர்வில் கலந்துகொண்டு இந்த அறிக்கையை கையளித்ததாக குழுவின் பணிப்பாளர் சபையின் தலைவர் சுதேஷ் நந்திமால் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிகவும் கவலையடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சித்திரவதை குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்ட தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமித்தமை தொடர்பிலும் பேரவையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டது இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்ட முக்கிய தருணமாக பார்க்கப்படுவதாக சுதேஷ் நந்திமால் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு மற்றும் கூட்டு மையம் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையிடம் இந்த ஆவணம் கையளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள் தொடர்பிலும் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து வரும் சிலர் வலுக்கட்டாயமாக கடத்தப்படுவதாக கைதிகளின் உரிமைகள் பாதுகாப்பு குழுவின் பணிப்பாளர் சபையின் தலைவர் சுதேஷ் நந்திமால் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply