• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வளமான வாழ்வுத் தேடலில் உயிரை இழக்கும் அகதிகள்

கனடா

உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், ஒளிமயமான வாழ்க்கையை நோக்கியும் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்படும் மக்களின் வாழ்க்கை மிகுந்த துயர் மிக்கது, அபாயகரமானது. எதிர்காலம் நோக்கிய இந்தத் தேடலில் அவர்களில் பலர் தமது உயிரையே இழக்க வேண்டி ஏற்படுகின்றது. உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சியில்  உயிரை இழப்பது என்பது எத்தனை அவலமானது? ஆண்கள் மாத்திரமன்றி பெண்களும் குழந்தைகளும் கூட ஆயிரக் கணக்கில் இந்தப் பயணத்தில் மரணத்தைத் தழுவுகின்றனர்.
 
ஓர் பிரதேசத்தை விட்டு இன்னொரு பிரதேசத்துக்கு, ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு, ஒரு கண்டத்தை விட்டு இன்னொரு கண்டத்துக்கு என தினமும் மக்கள் இடம்பெயர்ந்த வண்ணமே இருக்கின்றனர். போர், வன்முறைச் சூழல் என்பவை மாத்திரமன்றி இயற்கை அநர்த்தங்களும் கூட மக்களை இடம்பெயர நிர்ப்பந்திக்கின்றன. இந்தப் பயணத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் 8,565 பேர் மரணத்தைத் தழுவிக் கொண்டதாக இடம்பெயர்தலுக்கான பன்னாட்டு நிறுவனம் (IOM) தெரிவித்துள்ளது. இது கடந்த வருடத்தைய தரவுகளை விடவும் 20 விழுக்காடு அதிகம் என்பது கூடுதல் தகவல். அதே வேளை இது கணக்கில் வந்த தரவு மாத்திரமே. கணக்கில் வராமல் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகி இருக்குமோ தெரியாது. அது மாத்திரமன்றி இடப்பெயர்வு என்ற வரையறைக்குள் வைத்துப் பார்க்காமலும் கூட எத்தனையோ மனிதர்கள் காணாமல் போயிருக்க வாய்ப்பு உள்ளது.

காணாமல் போகும் இடம்பெயர்வோர்க்கான திட்டத்தின் கீழ் இடம்பெயரும் வேளையில் மரணத்தைத் தழுவுவோர், காணாமல் போவோர் தொடர்பான தகவல்களை இடம்பெயர்தலுக்கான பன்னாட்டு நிறுவனம் 2014ஆம் ஆண்டு முதல் திரட்டி வருகின்றது.

அந்தத் தரவுகளின் பிரகாரம் கடந்த வருடம் இடம்பெயர்தலின் போது மரணத்தைத் தழுவியவர்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் மத்தியதரைக் கடலில் மூழ்கியே இறந்துள்ளனர். ஆபிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பா நோக்கிய அபாயகரமான கடற்பயணத்தை மேற்கொண்ட இவர்கள் கரையை அடைந்த வேளை உயிரோடு இருக்கவில்லை. இது தவிர, 9 விழுக்காட்டினர் வாகன விபத்துகளிலும் 7 விழுக்காட்டினர் வன்முறைகளில் சிக்கியும் உயிரிழந்துள்ளனர்.

ஐ.நா. அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தின் தகவல்களின் படி கடந்த வருடத்தில் மாத்திரம் 114 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த வாழிடத்தை விட்டுப் புலம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர். ஆயுத மோதல்கள், வன்முறைச் சூழல், மனித உரிமை மீறல் செயற்பாடுகள், நீதிமன்ற வழக்குகள்,  சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆண்டுதோறும் மக்கள் பொதுவாக இடம்பெயர நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவ்வாறு இடம்பெயர முனையும் மக்களில் அநேகர் தங்கள் சொந்த நாட்டின் எல்லையைக் கூடத் தாண்டிச் செல்ல முடியாதவர்களாக உள்நாட்டிலேயே பல வருடங்களாக அகதிகளாக மாறிக் காலத்தைக் கழிக்கும் அவலநிலை உள்ளது. இவ்வாறு உள்நாட்டிலேயே அகதிகளாகத் தங்கியிருப்போர் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டோரில் 57 விழுக்காட்டினர் என்கிறது ஐ.நா. அகதிகள் உயர் ஆணையர் பணியகத் தகவல். தங்கள் நாட்டு எல்லையைக் கடந்து வெளியோறியோரில் கூட பெரும்பாலானவர்கள் தமது இலக்கு நாட்டைச் சென்றடைவது அரிதே. அவர்கள் பெரும்பாலும் அண்டை நாடுகளிலேயே அகதி வாழ்க்கை வாழும் நிலையே உள்ளது.

கடந்த வருடத்துக்கு முந்திய காலங்களில் 2016ஆம் ஆண்டிலேயே இடம்பெயர்ந்து செல்வோர் அதிக எண்ணிக்கையில் இறந்ததாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. அந்த ஆண்டில் 8,016 மரணங்கள் சம்பவித்துள்ளன. உள்நாட்டு மோதல்கள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் இருந்து அந்த வருடத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் தப்பிச் செல்ல முயன்று இருந்தனர். இவர்களின் பயண இலக்கு பெரும்பாலும் ஐரோப்பாவாக இருந்தது.

2016க்கு அடுத்ததாக 2022 இல் மரண எண்ணிக்கை 7,141 ஆக இருந்தது.
கடந்த 10 வருடங்களில் 2020ஆம் ஆண்டில் மாத்திரமே இடம்பெயர்வோர் மத்தியில் ஆகக் குறைந்த மரணங்கள் பதிவாகி உள்ளன. அந்த வருடத்தில் 4,032 பேர் மரணத்தைத் தழுவி இருந்தனர். கொரோனாக் கொள்ளை நோய்ப் பரவல் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும்.

இடம்பெயரும் மக்களைப் பொறுத்தவரை மிகவும் அபாயகரமான பயண மார்க்கமாக மத்தியதரைக் கடல் பகுதியே உள்ளது. இந்தக் கடல் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் 29,132 பேர் மரணத்தைத் தழுவியதாகப் பதிவாகி உள்ளது. இரண்டாவது அபாயகரமான பகுதியாக ஆபிரிக்காக் கண்டம் உள்ளது. இயற்கை வளங்கள் நிறைந்த கண்டமாக இருந்த போதிலும், அந்த வளங்கள் சாதாரண மக்களுக்குக் கிடைப்பதில்லை என்பதால் அவர்கள் வறியவர்களாகவே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அது மாத்திரமன்றி ஆயுதக் குழுக்களின் வன்முறையும் அந்தக் கண்டத்தில் அதிகமாக உள்ளது. இதனால் தமது உயிர்களைக் காத்துக் கொள்ளவும் வளமான வாழ்க்கையொன்றை உருவாக்கிக் கொள்ளவும் அவர்கள் தமது முன்னைநாள் காலனித்துவ நாடுகளான ஐரோப்பிய நாடுகளை நோக்கிப் படையெடுக்கின்றனர். இந்தக் கண்டத்தின் சஹாரா பாலைவனம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த பத்து ஆண்டுகளில் 14,394 பேர் தமது உயிர்களைத் தொலைத்து உள்ளனர்.

மூன்றாவது அபாயகரமான பகுதியாக அமெரிக்கா உள்ளது. வளமான வட அமெரிக்காவை நோக்கித் தெற்கில் இருந்து தினமும் பல்வேறு வழிகள் ஊடாகப் பயணப்படும் மக்களில் 9,101 பேர் கடந்த 10 ஆண்டுகளில் இறந்து போயுள்ளனர். பெரும்பாலும் ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பயண மார்க்கங்களில் ஆயுதக் குழுக்களால் கொல்லப்பட்டோரும் அடக்கம்.

ஆசியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் 7,267 பேர் மரணத்தைத் தழுவி உள்ளனர். இவர்களுள் பெரும்பாலோனோர் மியன்மாரைச் சேர்ந்த ரோஹிங்யா அகதிகள் என்கின்றன தகவல்கள்.

இவ்வாறு மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் 2,701 பேரும், ஐரோப்பாவில் 1,124 பேரும் மரணத்தைத் தழுவி உள்ளனர்.

இந்தக் கட்டுரையை வாசிக்கும் எமக்கு இவை புள்ளிவிபரங்களாக, தரவுகளாகத் தெரியக் கூடும். ஆனால், மரணத்தைத் தழுவிக் கொண்ட ஒவ்வொரு மனிதனதும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களைப் பொறுத்தவரை அவர்களது இழப்பு ஈடு செய்ய முடியாதது. இன்னும் ஆயிரக் கணக்கானோர் தமது உறவுகள் உயிரோடு உள்ளார்களா, இல்லையா என்பதைக் கூடத் தெரிந்து கொள்ள முடியாதவர்களாக உள்ளனர் என்பது எத்தனை கொடுந் துயரம்?

மனித நாகரிகத்தில் இடப் பெயர்வுகள் சகஜமானவை. அவை பல்வேறு தேவைகள் கருதி காலத்துக்குக் காலம் இடம்பெற்று வந்திருக்கின்றன. அத்தகைய இடப் பெயர்வுகள் வேறு. இன்றைய காலத்தில் இடம்பெறும் இடப் பெயர்வுகள் வேறு.

உலகம் அனைத்து உயிரினங்களுக்குமான வாழிடம். ஆனால், மனிதர்களுக்கு மாத்திரம் அது படிநிலைகளைக் கொண்டதாக மாறியிருக்கின்றது. அடித்தட்டு மக்களையும் செல்வநிலையில் உள்ளவர்களையும் கொண்டதாக விளங்கும் இந்த உலகில் பொருளாதாரச் சமத்துவம் இன்மை கொடுமையிலும் கொடுமை. இத்தகைய சமமற்ற நிலையே இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் இடப் பெயர்வுக்குப் பெரிதும் காரணமாகின்றது. ஜனநாயக விழுமியங்கள் மிகுந்த இன்றைய காலகட்டத்திலும் கூட சகிப்புத் தன்மை இல்லாத போக்கு அரசியல் அடிப்படையிலான இடப்பெயர்வுகளுக்குக் காரணமாக உள்ளது.

இத்தகைய நிலையில் உலகளாவிய மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் கிட்டிய அண்மைக் காலத்தில் மிகவும் அரிதாகவே தென்படுகின்றன. எனவே இடம்யெர்வோரின் அவலங்கள், மரணங்கள் தொடர்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன என்பதே கசப்பான யதார்த்தம்.

சுவிசிலிருந்து சண் தவராஜா
 

Leave a Reply