• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதை விட நாம் வாழும் பூமியை பாதுகாப்பதே முக்கியம் - பராக் ஒபாமா 

செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதை விட, நாம் வாழும் பூமியை பாதுகாப்பதே முக்கியம் என பாரிஸ் உச்சி மாநாட்டில் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். “செவ்வாய் கிரகத்தில் குடியேற வேண்டும் என்பதற்கான முனைப்பைவிட, மனிதகுலம் வாழத்தக்கதாக பூமியை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். ஏனெனில் அணுசக்தி யுத்தம் மற்றும் காலநிலை மாற்றம் போன்றவைக்கு பின்னரும், செவ்வாய் கிரகத்தை விட சிறப்பான வாழிடத்தை இந்த பூமி நமக்கு வழங்கக் காத்திருக்கும்’ என்றும் கூறியுள்ளார்.
  
பாரிஸில் நடைபெற்று வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கூடிய ’பவர் எர்த்’ உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஒபாமா, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உரையாற்றியுள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பான உலகின் அறைகூவல்களை புறக்கணிக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இருந்தபோது, 2015 பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக அறிவித்திருந்தார்.

அதன் பின்னர் பராக் ஒபாமாவின் பாரிஸ் உரை முக்கியத்துவம் பெற்றுள்ளது, “பல நாடுகளும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை கொண்டு செல்லக்கூடிய விண்கலன்களை உருவாக்கி வருகின்றனர்.

செவ்வாயை பூமியின் காலனியாக மாற்ற முயல்கிறார்களாம். பூமியின் சுற்றுச்சூழல் மிகவும் சீரழிந்து, அது வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் என்பதால், செவ்வாய் கிரகத்தின் காலனித்துவ திட்டத்தைப் பற்றி பலர் பேசுவதை கேட்கிறேன்.

அப்போதெல்லாம் அவர்களிடம் நான் கேட்க விரும்புவது ஒன்றுதான். ஒரு அணு ஆயுதப் போருக்குப் பிறகும், பூமி செவ்வாய் கிரகத்தைவிட வாழத் தகுதி மிக்கதாகவே இருக்கும்.

காலநிலை மாற்றத்திலிருந்து நாம் மீள எதுவும் செய்யாவிட்டாலும், பூமியில் ஒக்ஸிசன் மிச்சமிருக்கும். ஆனால் செவ்வாய் கிரகத்தில் அது சாத்தியமல்ல. எனவே, செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதை விட பூமியை கவனியுங்கள் என்கிறேன்.

நாம் இந்த பூமியில் வாழ்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளோம். மேலும் இந்த பூமியை பாதுகாத்து நாம் வாழக்கூடிய வகையில் வைத்திருந்தால் நன்றாக இருக்கும்.’’ என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நடப்பு ஜனாதிபதியான ஜோ பைடன், அடுத்த அதிபர் தேர்தலிலும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக களமிறங்க இருக்கிறார். ஆனால் கட்சியின் அதிருப்தியாளர்கள், பைடனுக்கு மாற்றாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிக்செல் ஒபாமா போட்டியிட வேண்டும் என்று முன்மொழிவதன் மத்தியில் பராக் ஒபாமாவின் பாரிஸ் உரை கவனம் பெற்றுள்ளது. 
 

Leave a Reply