• Welcome to TamilsGuide
செய்திகள் 1

90ஸ் மெலடி குயின் சுஜாதா! திரைத்துறைக்கு கிடைத்த பொக்கிஷம்

நெஞ்சோடு கலந்திடும் மெல்லிய குரலால் அனைவரையும் வசீகரிக்கும் பாடகி சுஜாதா மோகன். கேரளத்து பைங்கிளி என்றாலும் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் 4000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி மெய்மறக்க செய்து ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்தவர்.  

தனது 2 வயதில் தந்தையை இழந்த சுஜாதா, 7 வயதிலேயே மேடையில் பாட துவங்கிவிட்டார். கர்நாடக இசை மேதை மற்றும் பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸுடன் இணைந்து 2000க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். 1975ம் ஆண்டு வெளியான 'டூரிஸ்ட் பங்களா' என்ற மலையாள திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண் எழுதி பொட்டு தொட்டு' என்ற பாடலின் மூலம் பின்னணி பாடகியாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். 

தமிழில் இளையராஜாவின் இசையில் 1977ம் ஆண்டு வெளியான 'கவிக்குயில்' என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார். ஆனால் அந்த பாடல் வெளியாகவில்லை. அதனை தொடர்ந்து இளையராஜாவின் இசையில்  ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான 'காயத்ரி' திரைப்படத்தில் இடம் பெற்ற  'காலை பனியில் ஆடும் மலர்கள்' பாடல் தான் சுஜாதாவின் குரலில் தமிழில் வெளியான முதல் பாடல் .

சினிமாவில் அன்று முதல் தொடங்கியது பின்னணி பாடகி சுஜாதாவின் பயணம். ரோஜா திரைப்படத்தில் 'புது வெள்ளை மலை', 'காதல் ரோஜாவே', புதிய முகம் படத்தில் 'நேற்று இல்லாத மாற்றம்', ஜென்டில்மேன் படத்தில் 'என் வீட்டு தோட்டத்தில்', ஜீன்ஸ் படத்தில் 'அதிசயம்', மின்சார கனவு படத்தில் 'பூ பூக்கும் ஓசை' பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் 'சுடிதார் அணிந்து வந்த', மின்சார கண்ணா படத்தில் 'உன் பேர் சொல்ல ஆசை தான்' என அவரின் ரம்மியமான மயக்கும் குரலில் வெளியான இந்த பாடல்களே அதற்கு சான்றாகும். 

90 களில் மெலடி குயினாக அசத்தினார். ஏ.ஆர். ரஹ்மானின் ஆஸ்தான பாடகியாக இருந்த சுஜாதா அவரின் இசையமைப்பில் தான் ஏராளமான தமிழ் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுஜாதா பாடிய பெரும்பாலான பாடல்கள் ஹிட் பாடல்களாக அமைந்துள்ளன. இளையராஜா, தேவா, ராஜ்குமார், வித்யாசாகர், இமான் என ஏராளமான இசையமைப்பாளர்களின்  இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

பிலிம் கிரிட்டிக்ஸ், தமிழக அரசு மணிலா விருது, எக்ஸ்பிரஸ் விருது, கேரளா மாநில திரைப்பட விருது, ஏசியாநெட் திரைப்பட விருது, ஸ்வராலையா யேசுதாஸ் விருது என ஏராளமான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட சுஜாதா தற்போது பல இசை போட்டிகளில் நடுவராக இருந்து வளரும் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த ஆசானாக இருந்து வருகிறார். 

1981ம் ஆண்டு மருத்துவர் கிருஷ்ணன் மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினரின் ஒரே மகள் செல்ல மகள் தான் 'வா வாத்தி' புகழ் ஸ்வேதா மோகன். தாயை போலவே மகளும் பிரபலமான ஒரு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply