• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அழுகை வராமல் பாரதிராஜாவிடம் அறை வாங்கிய 4 கதாநாயகிகள்

சினிமா

தமிழ் சினிமாவில் கிராமத்து மண்வாசம் வீசக்கூடிய படங்களை இயக்குவதில் கெட்டிக்காரர் தான் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இவர் அறிமுகப்படுத்திய நடிகைகளின் பெயர்கள் ‘ர’ என ஆரம்பிக்கக்கூடிய வகையில் பெயர்களை மாற்றி அந்த ஹீரோயின்களுக்கு வைப்பது வழக்கம். அதையே ஒரு கட்டத்தில், யாரோ பெற்ற பிள்ளைக்கு நாம் யார் பெயர் வைப்பதா என, அந்த பழக்கத்தையும் மாற்றிக் கொண்டார். 

அப்படித்தான் ராதா, ரேவதி, ராதிகா, ரேகா, ரஞ்சிதா எல்லோருமே பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகைகள் தான். அதே போல நடிக்கும் போது அழுகை வராததால் பாரதிராஜாவிடம் 4 நடிகைகள் அடி வாங்கிய தகவலும் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இயக்குனரிடம் அடிவாங்கிய அவர்களும் டாப் ஹீரோயின்கள் ஆகியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை பற்றி இங்கு பார்ப்போம்.

ராதிகா: 

நடிகர் எம்.ஆர். ராதாவின் மகளாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை தான் ராதிகா. லண்டனில் படித்து வளர்ந்த பொண்ணா இது! என எல்லோரும் ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற படத்தில் கதாநாயகியாக ராதிகா தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இது பாரதிராஜாவின் இரண்டாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் பாஞ்சாலி கேரக்டரில் ராதிகா நடித்தார். கள்ளமற்ற கிராமத்து பெண்ணான பாஞ்சாலி, தொட்டாச்சிணுங்கி போல் படம் முழுக்க அழுது கொண்டே இருப்பார். ஆனால் ராதிகாவிற்கு டப்பா டப்பாவா கிளிசரின் போட்டாலும் அழுக வரவே இல்லையாம். உடனே பாரதிராஜா பொறுமை இழந்து கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். அதன் பின் கிளிசரின் இல்லாமலே தாரை தாரையாய் கண்ணீர் ஊற்றியதாம்.

ஸ்ரீதேவி: 

பாரதிராஜாவின் முதல் படமான ‘16 வயதினிலே’ படத்தில் ஸ்ரீதேவி மயில் என்ற கேரக்டரில் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தில் தன்னுடைய காதலன் கால்நடை மருத்துவரான சத்யஜித், அவரை விட்டு பிரிந்து போகும்போது அழுகிற சீன் இருக்கும். அதில் பாரதிராஜா எதிர்பார்த்த அளவுக்கு ஸ்ரீதேவி நடிக்காததால் அறை வாங்கினார்.

ரேவதி: 

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் தான் மண்வாசனை. இந்த படத்தில் பாண்டியன், ரேவதி இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்தனர். இதில் ஒரு கிராமத்து பெண்ணாக ரேவதி கனகச்சிதமாக நடித்தார். இதில் அவருடைய காதலனை கணவராகவே மனதில் வாழ்ந்து கொண்டிருந்த ரேவதிக்கு, திடீரென்று அவர் கைவிட்டதும் மனம் நொந்து போய் அழுகிறார். அந்த காட்சியில் ரேவதிக்கு கண்ணீர் வராததால் கன்னம் சிவக்கும் அளவுக்கு பாரதிராஜாவிடம் அறை வாங்கிய பிறகு கண்ணீர் வந்ததாம்.

ராதா: 

நவரச நாயகன் கார்த்திக் மற்றும் ராதா இருவரும் அறிமுகமான ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா தான் இயக்கினார். இந்தப் படம் மட்டுமல்ல அதன் தொடர்ச்சியாக ராதா, நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி உடன் ‘முதல் மரியாதை’ என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தையும் பாரதிராஜா தான் எடுத்தார். இந்த ரெண்டு படங்களிலும் பாரதிராஜா எதிர்பார்த்த அளவுக்கு ராதா நடிக்கவில்லை என்றால், உடனே அறை தான் விழுகுமாம்.
 

Leave a Reply