• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தங்க இடமும், வாய்ப்பும் கொடுத்த சங்கிலி முருகன்.. சம்பளமே வாங்காமல் இசையமைத்த இசைஞானி

சினிமா

திரைக்கதை மன்னன் பாக்யராஜின் இரண்டாவது படமான ஒரு கை ஓசை என்ற படத்தின் மூலம் சங்கிலி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமான முருகன் என்ற நடிகர் பின்னாளில் சங்கிலி முருகன் என்று அறியப்பட்டார். குணச்சித்திர வேடங்கள், வில்லன் வேடங்களில் நடித்து வந்த சங்கிலி முருகன் பின்னர் முருகன் சினி ஆர்ட்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தினைத் தொடங்கி பல படங்களை எடுத்தார்.

விஜய்யின் மெகா ஹிட் திரைப்படமான காதலுக்கு மரியாதை மற்றும் அவரின் 50-ஆவது படமான சுறா ஆகியவை சங்கிலி முருகன் தயாரித்த படங்களே. யோகி பாபு நடிப்பில் தேசிய விருது படமான மண்டேலாவில் கூட சங்கிலி பாபு கிராமத்து பெரியவராக நடித்து சங்கிலி முருகன் அசத்தியிருப்பார்.

இப்படி பன்முகங்கள் கொண்ட சங்கிலிராஜனுக்கு முதன் முதலாக வாய்ப்பளித்தவர் ஒ.ஏ.கே தேவர் தான். மதுரைக்காரரான சங்கிலி முருகன் சினிமா ஆசையில் சென்னை வர அவருக்கு நாடகங்கள் எடுப்பதற்கு உறுதுணையா இருந்திருக்கிறார் ஓ.ஏ.கே.தேவர். திருச்சியில் நடைபெற்ற பொருட்காட்சியில் தனது நாடகங்களைத் திரையிட அட்வான்ஸ பெற்று வந்தவுடன் இவரைச் சந்திக்க இருவர் வந்திருக்கின்றனர்.

அவர்கள் தங்களை நாங்கள் பாவலர் இசைக்குழுவிலிருந்து வருகிறோம். எங்கள் அண்ணன் வரதராஜன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ள சங்கிலி முருகன் வரதராஜனை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தமையால் அவர்களை வரவேற்று என்னவென்று கேட்டார். பிறகு அவர்கள் தங்களையும் அறிமுகப்படுத்தி கொண்டனர். அவர்கள்தான் பாஸ்கரன், இளையராஜா.

சங்கிலி முருகனின் நாடகத்திற்கு இசையமைக்க வாய்ப்புக் கேட்டு வந்திருப்பதாகச் சொல்ல அவருக்கு ஒரே ஆச்சர்யம். இப்போது தான் அட்வான்ஸ் வாங்கி வந்திருக்கிறோம் உடனுக்குடன் அனைத்துமே கூடி வருகிறதே என்று.

பின்னர் அவர்களின் இசையறிவினை அறிந்து மெய்சிலிர்த்து சங்கிலிமுருகன் தனது நாடகங்களில் தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். மேலும் தனது வீட்டின் இன்னொரு பகுதியை அவர்கள் தங்கிக் கொள்ள வசதி ஏற்படுத்தித் தருகிறார்.

இவ்வாறு படிப்படியாக நாடகங்களிலிருந்து திரைத்துறைக்கு இளையராஜா வளர்ந்தார். அதன்பின் பல ஆண்டுகளுக்குப் பின் இளையராஜாவிடம் ஒரு தட்டு நிறைய பணமும், கல்கண்டும் கொண்டு போய் நான் தயாரிக்கும் படத்திற்கு நீங்கள் தான் இசையமைக்க வேண்டும் என்று கேட்க, இளையராஜாவோ தட்டில் உள்ள கல்கண்டை மட்டும் எடுத்துக் கொண்டு உங்கள் படத்திற்கு நான் சம்பளம் வாங்குவதா என்று அந்தப் பணத்தினை நிராகரித்திருக்கிறார் இளையராஜா.

இதேபோல் சங்கிலி முருகனின் இரண்டு படங்களுக்கு இளையராஜா சம்பளம் வாங்காமல் இசையமைத்துக் கொடுத்திருகிறார். தனக்கு வாய்ப்பளித்த ஆசானுக்கு தான்நன்றி செலுத்தும் விதமாக சம்பளம் வாங்காமல் இசையமைத்த இசைஞானியின் செயலைக் கண்டு நெகிழ்ந்து போயிருக்கிறார் சங்கிலி முருகன்.

John Alagar

Leave a Reply