• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்னாள் முதலமைச்சர்கள் 3 பேர் சேர்ந்து தயாரித்த படம்

சினிமா

எம்.ஜி.ஆர், தனது ஆரம்பகாலத்தில் சில படங்களில் மட்டும் எம்.ஜி.ராம்சந்தர் என்ற பெயரில் தோன்றினார்.

அந்தக் காலகட்டத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் பிரபலமாக இருந்ததால் தன்னை வேறுபடுத்திக் கொள்ள அந்தப் பெயரைப் பயன்படுத்தியதாகச் சொல்வார்கள்.

அப்படி எம்.ஜி.ராம்சந்தர் பெயரில் அவர் நடித்த படங்களில் ஒன்று, ‘நாம்’.

இதில், வி.என்.ஜானகி, எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, எம்.ஜி.சக்கரபாணி, பி.கே.சரஸ்வதி, எஸ்.ஆர்.ஜானகி, ஆர்.எம்.சேதுபதி, சாண்டோ சின்னப்பா தேவர், டி.கே.சின்னப்பா உட்பட பலர் நடித்தனர்.

இதை, ஜுபிடர் பிக்சர்ஸ் மற்றும் மேகலா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்தது. மேகலா பிக்சர்ஸில் மு.கருணாநிதி, அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த சினிமா பத்திரிகையாளர் ராஜாராம், எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகி ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தார்கள்.

முன்னாள் முதல்வர்களான மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகி தயாரித்த படம் என்று இதை சொல்லலாம்.

காசி எழுதிய ‘காதல் கண்ணீர்’ என்ற கதையைத் தழுவி உருவானது இந்தப் படம். கருணாநிதி திரைக்கதை, வசனம் பாடல்களை எழுதினார்.

தாய் மரணப் படுக்கையில் இருக்கும்போது, தான் யார் என்பதைத் தெரிந்து கொள்கிறார் குமரன் (எம்.ஜி.ஆர்). அவருக்கான சொத்து பற்றிய உயில் விவகாரங்களை மறைத்து வைத்திருக்கிறார், மலையப்பன் (பி.எஸ்.வீரப்பா). குமரனுக்கான சொத்தை அடையும் நோக்கில் இருக்கிறார் மருத்துவர் சிரஞ்சீவி (சக்கரபாணி).

அதற்காக அவர் மகளைக் குமரனுக்குத் திருமணம் செய்துவைக்க விரும்புகிறார். இதற்கிடையே மலையப்பனின் சகோதரி மீனாவை (வி.என்.ஜானகி) காதலிக்கிறார், குமரன்.

ஒரு கட்டத்தில் சொத்து தொடர்பாக மீனாவைச் சந்தேகிக்கும் குமரன் ஊரைவிட்டுச் சென்று குத்துச்சண்டை வீரனாகிறார்.

இந்நிலையில் குமரன் வீட்டுக்கு மலையப்பன் தீ வைக்கிறார்.

அதில் அவர் இறந்துவிட்டதாகச் செய்தி பரவுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. சிறந்த எடிட்டரான காசிலிங்கம் படத்தை இயக்கினார். பிரபல பாடகர் சிதம்பரம் ஜெயராமன் இசையமைத்தார்.

நாகூர் ஹனிபா, ஏ.எம்.ராஜா, ஜிக்கி, எம்.எல்.வசந்தகுமாரி உட்பட சிலர் பாடினர். இருந்தாலும் இந்தப் படத்தின் பாடல்கள் அதிகம் கவனிக்கப்படவில்லை.1953-ம் ஆண்டு இதே நாளில்தான் இந்தப் படம் வெளியானது.
 

Leave a Reply