• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மஸ்க் மீது முன்னாள் ஊழியர்கள் வழக்கு

டெஸ்லா (Tesla), ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனரும், உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் (52), கடந்த 2022 அக்டோபர் மாதம், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த இணையவழி உரையாடல்களுக்கான சமூக வலைதளமான "டுவிட்டர்" (Twitter) எனும் வலைதளத்தை, $44 பில்லியனுக்கு வாங்கினார்.

டுவிட்டரின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், எலான் மஸ்க், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.

அவற்றில் ஒன்றாக அதுவரை இருந்து வந்த தலைமை செயல் அதிகாரியான "பராக் அக்ரவால்" (Parag Agrawal) எனும் இந்தியரை அப்பதவியில் இருந்து நீக்கினார்.

மேலும், டுவிட்டர் பெயரை "எக்ஸ்" (X) என மாற்றினார் மஸ்க்.

எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாய் குறைய தொடங்கியதை அடுத்து, பல நடவடிக்கைகள் மூலம் அதனை லாபகரமானதாக மாற்ற பல்வேறு முயற்சிகளை மஸ்க் எடுத்து வருகிறார்.

இந்நிலையில், எக்ஸ் வலைதளத்தின் முன்னாள் உயர் அதிகாரிகளான பராக் அக்ரவால், நெட் சீகல், விஜய கட்டே, ஷான் எட்ஜெட் உள்ளிட்ட 4 பேர், தங்களை பணிநீக்கம் செய்ததற்கு ஈடாக மஸ்க் வழங்க வேண்டிய $128 மில்லியன் தொகையை வழங்கவில்லை என அவர் மீது சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும், டுவிட்டரை விலைக்கு வாங்கிய சில நிமிடங்களிலேயே பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தங்களை வெளியேற்றியதாக இந்த நால்வரும் மஸ்க் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

தான் திருப்பி தர வேண்டிய தொகையை தராமல் பிறரை அவர் மீது வழக்கு தொடுக்க செய்து காலம் கடத்துவதுதான் மஸ்கின் வழிமுறை என தங்கள் குற்றச்சாட்டில் அந்த நால்வரும் பதிவு செய்துள்ளனர்.

தற்போது வரை இது குறித்து எக்ஸ் நிறுவனம், அதிகாரபூர்வமாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
 

Leave a Reply