• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரு கூட்டுக்கிளியாக ஒரு தோப்பு குயிலாக

சினிமா

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்றால் அது நடிகர் திலகம் என அழைக்கப்படும் சிவாஜி கணேசன் என்பது எல்லோருக்கும் தெரியும். சிறு வயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கி பின்னர் சினிமாவுக்கு வந்தவர். பராசக்தி என்கிற முதல் படத்திலேயே சி்றப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்.

பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் இவர். ஒருபக்கம் எம்.ஜி.ஆர் ஆக்‌ஷன் படங்களில் நடித்தால் சிவாஜியோ நடிப்புக்கு தீனி போடும் கதைகளில் நடித்து எம்.ஜி.ஆருக்கே மிகவும் பிடித்த நடிகராக மாறினார். சிவாஜி நடித்த படங்களில் பாடல் காட்சிகளுக்கு அவருக்கு பலரும் குரல் கொடுத்துள்ளனர். 

சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்தில் அவருக்கு பாடியது சி.எஸ்.ஜெயராமன். சிவாஜியின் ஆரம்பகால படங்களில் அவருக்கு அதிக பாடல்களை பாடியவர் அவர்தான். அதன்பின் திருச்சி லோகநாதன் அவருக்கு நிறைய பாடல்களை பாடியிருக்கிறார். ‘தூக்கு தூக்கி’ படம் உருவான போது லோகநாதன் அதிக சம்பளம் கேட்டார்.

எனவே, அவருக்கு பதில் அப்போது திரைத்துறையில் சில பாடல்களை பாடியிருந்த டி.எம்.சவுந்தரராஜனை கொண்டு வந்தார்கள். ஆனால், எனக்கு லோக நாதன்தான் பாட வேண்டும் என அடம்பிடித்தார் சிவாஜி. ஆனால், சிவாஜியை சம்மதிக்க வைத்து டி.எம்.சவுந்தரராஜனை பாட வைத்தனர். 

அதன்பின் டி.எம்.எஸ் குரல் தனக்கு கச்சிதமாக பொருந்துவதை சிவாஜி புரிந்துகொண்டார். அதன்பின் பல நூறு பாடல்களை சிவாஜிக்காக டி.எம்.எஸ் பாடினார். அதேநேரம் 70களுக்கு பின் சிவாஜி வயதாகி குணச்சித்திர வேடங்களில் நடித்தபோது அவருக்கு மலேசியா வாசுதேவன் குரல்தான் கச்சிதமாக இருந்தது.

‘ஒரு கூட்டுக்கிளியாக ஒரு தோப்பு குயிலாக’ சிவாஜி பாடும்போது அது அவர் பாடுவது போலவே இருக்கும். முதல் மரியாதை படத்தில் சிவாஜிக்கு அனைத்து பாடல்களையும் பாடியது மலேசியா வாசுதேவன்தான். அதிலும் ‘பூங்காத்து திரும்புமா’ பாடல் சிவாஜிக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கும். எனவே, 80களில் ஒரு படத்தில் நடிக்க சிவாஜி ஒப்புக்கொண்டால் மலேசியா வாசுதேவன்தான் எனக்கு பாட வேண்டும்’ என சொல்லிவிட்டுத்தான் அந்த படத்தில் நடிக்க சிவாஜி ஒப்புக்கொள்வாராம்.
 

Leave a Reply