• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்ணதாசன் - கருணாநிதி உச்சக்கட்ட மோதல்... படத்தில் இருந்து விலகிய சிவாஜி : காரணம் இதுதானா?

சினிமா

தமிழ் சினிமாவில் எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர், கவிஞர் என பன்முக திறமை கொண்ட கண்ணதாசன், முதன் முதலில் திரைக்கதை வசனம் எழுதிய திரைப்படம் இல்லற ஜோதி

கருணாநிதியுடன் கண்ணதாசன் மோதலில் ஈடுபட்டதால், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படத்தில் இருந்து சிவாஜி கணேசன் விலகியதும், அதன்பிறகு சிவாஜி – கருணாநிதி இருவரும் கண்ணதாசனை அதிகமாக விமர்சித்ததும் பலரும் அறியாத ஒரு தகவல்.

தமிழ் சினிமாவில் எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர், கவிஞர் என பன்முக திறமை கொண்ட கண்ணதாசன், முதன் முதலில் திரைக்கதை வசனம் எழுதிய திரைப்படம் இல்லற ஜோதி. மாடர்ன் தியேட்டர் டி.ஆர். சுந்தரம் தயாரித்த இந்த படத்தில் சிவாஜி நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போதே, கருணாநிதிக்கும் கண்ணதாசனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த படம் வெளியாகி வெற்றி பெற்றிருந்தாலும், கருணாநிதி – கண்ணதாசன் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. அந்த நேரத்தில் சுகம் எங்கே என்ற படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் தொடங்க அந்த படத்திற்கு கதை எழுதியவர் கருணாநிதி. இந்த படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அதேபோல் இந்த படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பை கண்ணதாசனுக்கு கொடுத்தார் டி.ஆர்.சுந்தரம்.

அந்த காலக்கட்டத்தில் கண்ணதாசனுடன் மோதலில் இருந்த கருணாநிதி தனது கதைக்கு கண்ணதாசன் வசனம் எழுதுவதை விரும்பாத நிலையில், தயாரிப்பாளர் டி,ஆர்.சுந்தரத்திடம் இது பற்றி கூறியுள்ளார். ஆனாலும் அவர் கண்ணதாசனை மாற்ற விரும்பாததால், கருணாநிதி இந்த படத்தில் இருந்து விலகினார். ஆனால் ஆங்கில படமான தி சோல்ஜர்ஸ் வைஃப் படத்தின் தழுவலாகத்தான் சுகம் எங்கே கதை எழுதியதால், தான் இல்லாமல் சுகம் எங்கே படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

அதே சமயம், கருணாநிதி – கண்ணதாசன் இடையே கடுயைான மோதல் இருப்பதால், இந்த படத்தில் நடித்தால், அது சரியாக இருக்காது என்று நினைத்த சிவாஜி கணேசன் அந்த படத்தில் இருந்து விலகினார். இதை பற்றி கவலைப்படாத டி.ஆர்.சுந்தரம், சிவாஜிக்கு பதிலாக கே.ஆர்.ராமசாமியை நாயகனாக வைத்து படத்தை எடுத்துள்ளார். படத்தில் சாவித்திரி நாயகியாக நடித்திருந்தார். தனது கதை தான் இல்லாமல் படமாகிறதே என்ற ஆத்திரத்தில், அதே கதையை வரலாற்று காலத்தில் நடக்கும் ராஜா ராணி கதையாக மாற்றி அம்மையப்பன் என்ற பெயரில் படமாக எடுத்தார்.

பீம்சிங் இயக்கத்தில் வெளியான முதல் படமான இந்த படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாயகனாக நடித்திருந்தார். சமூக படமான சுகம் எங்கே, சரித்திர படமான அம்மையப்பன் என ஒரே கதையை கொண்ட இந்த இரண்டு படங்களும், 1954-ம் ஆண்டு ஒரே மாதத்தில் வெளியானது. ஆனால் இந்த இரண்டு படங்களுமே தோல்விப்படமாக அமைந்தது. அதன்பிறகு கருணாநிதியுடன் சேர்த்து சிவாஜியையும் தனது எதிரியாக மாற்றிக்கொண்ட கண்ணதாசன் அவரை பற்றி கடுமையான விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply