• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உக்ரைன் போர் - பேரழிவை நோக்கி?

சினிமா

உக்ரைன் போர் மூன்றாவது வருடத்தில் நுழைந்துள்ளது. சமாதான வழியிலும், யுத்த மார்க்கமாகவும் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஸ்யாவும், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் மேற்கொண்ட முயற்சிகள் எவையும் இதுவரை வெற்றியளிக்கவில்லை. மாறாக உயிர் இழப்பும், பொருண்மிய இழப்பும் அழிவுகளும் தொடர்ந்த வண்ணமேயே உள்ளன.
 
ரஸ்ய 'ஆக்கிரமிப்பு'க்கு எதிராகப் போரிடும் உக்ரைன் பாரிய மனித அழிவைச் சந்தித்துள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. போர் தொடங்கிய நாளில் இருந்து இன்றுவரை உக்ரைன் தரப்பில் 5 இலட்சம் பேர் வரையான படையினரும் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வருடம் கோடை காலத்தில் உக்ரைன் தரப்பில் அறிவிக்கப்பட்ட பதில் தாக்குதல் நடவடிக்கையின் போது மாத்திரம் ஒரு இலட்சம் வரையான படையினர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்ட படையினருள் சற்றொப்ப 5,800 வெளிநாட்டுக் கூலிப்படையினரும் அடக்கம் என்கிறது ரஸ்யத் தரப்புத் தகவல்கள். படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படப் போதிய மனித வலு இல்லாத காரணத்தினால் 'கட்டாய ஆட்சேர்ப்பு' நடவடிக்கைகளை உக்ரைன் ஆரம்பித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆயுத விநியோகம், பொருளாதார உதவி, புலனாய்வுத் தகவல்கள் போன்ற விடயங்களில் பெரிதும் மேற்குலகிடம் தங்கியிருக்கும் உக்ரைன் அவை தடைப்படும் அல்லது தாமதமாகும் அபாயத்தைத் தொடர்ந்து எதிர்கொண்ட வண்ணமேயே உள்ளதைப் பார்க்க முடிகின்றது. இத்தகைய தடைகள் மற்றும் தாமதங்கள் படையினரின் போரிடும் ஆற்றலில் மாத்திரமன்றி மனோநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. பல வேளைகளில் படைத் தளபதிகளே இவை பற்றி வெளிப்படையாகக் குறை கூறியதையும் பார்க்க முடிந்தது.

இத்தகைய பின்னணியில் படைத் தளபதி ஜெனரல் வலரி சலுஸ்னி மாற்றப்பட்டு உள்ளார். மேனாள் படைத் தளபதிக்கும், அரசுத் தலைவர் விளாடிமிர் ஸெலன்ஸ்கிக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசல் உலகறிந்த விடயம். இந்தப் பின்னணியிலேயே படைத் தளபதியின் மாற்றம் இடம்பெற்று உள்ளது. படை நடவடிக்கைகள் தொடர்பிலும், வளங்கள் தொடர்பிலும் ஜெனரல் சலுஸ்னி வெளிப்படையாகப் பேசிவந்த நிலையிலேயே அவரின் மாற்றம் சாத்தியமானதாகத் தெரிகின்றது. அதேவேளை, அமெரிக்காவுடனான உறவில் படைத் தளபதிக்கு ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளே அவரின் மாற்றத்தைச் சாத்தியப்படுத்தின என ஒரு சில ஊடகங்களில் வெளிவந்த செய்திகளையும் பார்க்க முடிகின்றது.

புதிய தளபதியாகப் பதவியேற்றிருக்கும் ஒலக்சான்டர் சிர்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் பிறந்து இராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் உடையவர் என்பது வரலாற்று முரண்நகை. புதியவரின் பொறுப்பேற்பின் பின்னர் கள நிலவரத்தில் உக்ரைனுக்குச் சாதகமான மாற்றங்கள் நிகழலாம் என்ற எதிர்வுகூறல்கள் இருந்த போதிலும் களத்தில் பின்னடைவையே உக்ரைன் தரப்பு சந்தித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருந்து வந்த அவ்டீவ்கா நகரத்தை ரஸ்யப் படைகள் பெப்ரவரியில் கைப்பற்றி உள்ளன. இதனைத் தொடர்ந்து அந்த நகரின் அருகே அமைந்துள்ள ஒருசில கிராமங்களும் ரஸ்யப் படையினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

குறித்த இடங்களில் இருந்து தந்திரோபாய அடிப்படையில் தமது படையினர் விலக்கிக் கொள்ளப்பட்டதாக உக்ரைன் தரப்பு அறிவித்துள்ள போதிலும் அதனை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை. இந்தச் சமரில் படைகள் சந்திந்த இழப்பும், படைகள் பின்வாங்கிய போதில் ஆயிரம் வரையான படையினர் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதுடன் பெருமளவிலான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ரஸ்யா விடுத்துள்ள அறிவிப்பும் உக்ரைன் தரப்பின் அறிவிப்பைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளன.

போர்க் களத்தில் நீண்ட காலமாகவே ஒருவித மந்தநிலை அவதானிக்கப்பட்டு வருகின்றமை வெளிப்படையான விடயம். போரிடும் இரண்டு தரப்புமே களத்தில் பாரிய முன்னேற்றம் எதனையும் அடையும் நிலையில் இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகின்றது. விரைவான வெற்றி எதனையாவது காண்பித்துவிட வேண்டும் என்னும் முனைப்பு உக்ரைன் தரப்பில் இருந்தாலும் அதனைச் சாதித்துவிட முடியாத நிலையிலேயே உக்ரைன் தரப்பு சிக்கிக் கொண்டுள்ளதைப் பார்க்க முடிகின்றது. மறுபக்கத்தில் ரஸ்யத் தரப்போ இழப்புக்களை முடிந்தவரை குறைத்துக் கொண்டு மெதுமெதுவாக முன்னேறும் தந்திரத்தைக் கடைப்பிடித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

மேற்குலகின் ஆயுத பலத்தையும் பொருண்மிய உதவிகளையும் மாத்திரம் நம்பியிருக்கும் உக்ரைன் பாரிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளதாகவே தெரிகின்றது. உக்ரைனுக்கு அதிகளவில் உதவிகளை வழங்கிவரும் நாடான அமெரிக்காவில் உக்ரைனுக்கு உதவிகள் வழங்குவதில் உருவாகிவரும் எதிர்ப்பு நிலைப்பாடும், பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் படை நடவடிக்கைகளுக்கு அதிக உதவிகளை வழங்க வேண்டிய நிலையில் அமெரிக்கா இருப்பதுவும் நிலமைகளை மேலும் சிக்கலாக்கி வருவதைக் காண முடிகின்றது.

இந்நிலையில் இந்த வருடம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள அரசுத் தலைவர் தேர்தல் உக்ரைன் போர் தொடர்பில் முக்கிய விடயமாகப் பார்க்கப்படுகின்றது. நடப்பு அரசுத் தலைவர் ஜோ பைடன் மீண்டும் வெற்றியைப் பெற்றுக் கொள்வாராக இருந்தால் உக்ரைன் தரப்புக்கு அது சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடவுள்ள டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றால் உக்ரைன் எதிர்பார்க்கும் உதவிகள் தொடருமா என்ற கேள்வி எழுகின்றது. அவ்வாறு உதவிகள் தடைப்படுமானால் உக்ரைன் போர் ஏதாவதொரு வகையில் முடிவுக்கு வந்தே ஆகவேண்டிய தேவை உள்ளது.

தற்போதைய நிலையில் உக்ரைன் போர் மூன்றாவது வருடத்திலும் தொடரும் வாய்ப்புகளே அதிகமாக உள்ளன. இந்நிலையில் களம் யாருக்குச் சாதகமாக அமையப் போகின்றது என்ற கேள்வி எழுகின்றது. ரஸ்யா மெதுமெதுவாகக் களத்தில் முன்னேறி வரும் நிலையில் உக்ரைன் சமரசத்துக்குத் தயாராகுமா அல்லது தற்போதைய நிலையில் உக்ரைனின் பின்னணியில் செயற்பட்டுவரும் நேட்டோ உக்ரைனுக்கு ஆதரவாக நேரடியாகக் களத்தில் இறங்குமா என்பது அடுத்துவரும் ஓரிரு மாதங்களில் தெரிந்துவிடும்.

உக்ரைன் போர் ஆரம்பமான போதில் அது மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும் என்ற எதிர்வுகூறல்கள் வெளிவந்தமை ஞாபகம் இருக்கலாம். நேட்டோ நாடுகள் உக்ரைனில் நேரடியாகத் தலையீட்டை நிகழ்த்துமாக இருந்தால் அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்பதுவும் அதன் தொடர்ச்சி ஒட்டுமொத்த உலக அழிவுக்குக் காரணமாகும் என்பதையும் விளக்க பூகோள அரசியல் அறிவு எதுவும் அவசியம் இல்லை.

சுவிசிலிருந்து சண் தவராஜா

Leave a Reply