• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குமரன் சிவமணி தன் அப்பா பெயரை காப்பாற்றிவிட்டார் - பாக்கியராஜ்

சினிமா

ஜெ.எஸ்.பி. ஃபிலிம் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெ.எஸ்.பி. சதீஷ் எழுதி இயக்க, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் ஆர்த்தி நடிப்பில், பெண் குழந்தைகள் விளையாட்டை மையப்படுத்தி, உருவாகியுள்ள திரைப்படம் "சிங்கப் பெண்ணே".

டிரையல்தான் எனப்படும் நீச்சல் மிதிவண்டி மற்றும் ஓட்டப்பந்தயம் சேர்ந்த போட்டியில் தேசிய அளவில் பலமுறை வெற்றி பெற்றி வீராங்கனை ஆர்த்தி இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் மறைந்த பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.ன். நம்பியார் அவர்களின் பேரன் தீபக் நம்பியார் வில்லனாக அறிமுகமாகியுள்ளார்.

இவர்களுடன் பசங்க சிவகுமார், ஏ.வெங்கடேஷ், சென்ராயன், பிரேம், பாய்ஸ் ராஜன், ஜானகி, இந்துமதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். விரைவில் திரைக்குவரவுள்ள இப்படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட இயக்குநர் பாக்கியராஜ் பேசும் போது, "உண்மையான சிங்கப்பெண்களை வைத்து, பெற்றவர்களுக்கும் பெண்களுக்கும் ஊக்கம் தர வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு படத்தை தயாரித்து, இயக்கி இருக்கும் இயக்குநர் சதீஷ் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். ஆர்த்தி மற்றும் அவரது பெற்றோருக்கு என் வாழ்த்துக்கள்."

"பத்திரிக்கையாளர்கள் ஒரு நல்ல படத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். சதீஷ் பார்க்க பயங்கர ஃபிட்டாக இருந்தார், படத்திலும் நடித்திருக்கிறார். அவரிடம் நல்ல ஹீரோவாக வரும் திறமை இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் குமரன் சிவமணிக்கு அவரது அப்பாவிடம் இருந்து இசை வந்திருக்கும், அவரின் அப்பா பெயரை காப்பாற்றி இருக்கிறார்," என்று தெரிவித்தார்.

இப்படத்தின் வசனத்தை கபிலன் வைரமுத்துவும், ஒளிப்பதிவை என்.கே. ஏகாம்பரமும், படத்தொகுப்பை கே.எல். பிரவீனும், இசையை டிரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணியும் செய்துள்ளனர்.
 

Leave a Reply