• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாடல் வரிகளால் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டவர் கவிஞர் வாலி

சினிமா

1960 முதல் 2010 வரை 50 வருடங்கள் தனது பாடல் வரிகளால் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டவர் கவிஞர் வாலி. கண்ணதாசன் கோலோச்சிய போதே அவருக்கு போட்டியாக பெரிய பாடலாசிரியர் ஆனவர் இவர். இவர் எழுதிய பல பாடல்களை கண்ணதாசன் எழுதியது என பலரும் நினைத்தது கூட நடந்தது.

60களில் கோலோச்சிய எம்.ஜி.ஆர், சிவாஜி என இரு பெரும் திரை ஆளுமைகளுக்கு பாடல்களை எழுதியிருக்கிறார். கண்ணதாசனை போலவே பல காதல் மற்றும் தத்துவ பாடல்களை எழுதி இருக்கிறார். எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் தனது படங்களுக்கு வாலியையே பாடல் எழுத வைத்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் அரசியல் தொடர்பான பாடல்கள் அனைத்தையும் எழுதியது வாலிதான். 60களுக்கு பின் ரஜினி, கமல் தொடங்கி விஜய் – அஜித் வரை எல்லோருக்கும் பாடல்களை எழுதி இருக்கிறார். எந்த காலகட்டத்திற்கும் ஏற்றார் போல் பாடல்களை எழுதுவதில் வாலி கில்லாடி. அதோடு, அப்போது டிரெண்டிங்கில் இருக்கும் விஷயங்களை தனது பாடல்களில் கொண்டு வருவார்.

அதனால்தான் அவருக்கு வாலிபக் கவிஞர் வாலி என பெயர் வந்தது. 50க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை எழுதி இருக்கிறார். இளையராஜாவுடன் மோதல் எழுந்து இயக்குனர் பாக்கியராஜே தனது படங்களுக்கு இசையமைக்க துவங்கினார். அவரின் இசையிலும் வாலி பாடல்களை எழுதி இருக்கிறார்.

அவருக்கு பாடல் எழுதிய அனுபவம் பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய வாலி ‘பாக்கியராஜுக்கு பாடல் எழுதுவது மிகவும் கடினம். பல்லவியை எழுதி கொடுத்தால் அதை பல மணி நேரம் பார்த்துக்கொண்டே இருப்பார். அப்புறம் எப்போது பாடலை எழுதி முடிப்பது?!.. ஒருமுறை அப்படி பார்த்துக்கொண்டே இருந்தார்.

சரி நீங்கள் பார்த்துக்கொண்டே இருங்கள். நான் வெளியே போயிட்டு வருகிறேன் என அவரிடம் சொன்னேன். எங்கே எனக்கேட்டார். ‘திருச்சி வரை போய்விட்டு வருகிறேன்’ என சொன்னேன். ஆனால், ஆர்மோனியத்தை வாசிக்க துவங்கி அவரே இசையமைக்க துவங்கியது அபாரம். அது எல்லோராலும் முடியாது’ என வாலி கூறினார்.
 

Leave a Reply