• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதுவரை அப்படி ஒரு அமைதியான விஜயகாந்தை ரசிகர்கள் பார்த்திருக்கவில்லை.

சினிமா

விஜயகாந்த் பல படங்களில் நடித்திருந்தாலும் சின்ன கவுண்டர் அவருக்கு ஒரு முக்கிய படமாக இருக்கிறது. ஏனெனில் துப்பாக்கியை எடுத்துகொண்டு தீவிரவாதிகளை சுட்டுக்கொண்டும், காலை தூக்கி அடித்து ஆக்‌ஷன் படங்களிலும் நடித்து வந்த அவர் இந்த படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருந்தார்.

அதுவரை அப்படி ஒரு அமைதியான விஜயகாந்தை ரசிகர்கள் பார்த்திருக்கவில்லை. அம்மா பாசம், ஊரே மதிக்கும் மனிதர், மனைவியின் தங்கைக்கு கலங்கம் வந்துவிடக்கூடாது என பழியை அவர் மேல் போட்டுக்கொண்டு கெட்ட பெயர் வாங்கும் வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் அவரை அப்படி நடிக்க வைத்திருந்தார்.

இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் விஜயகாந்தின் மனைவியாக சுகன்யாவும், அம்மா வேடத்தில் மனோரமாவும் சிறப்பாக நடித்திருந்தனர். அதேபோல் கவுண்டமணி – செந்திலின் காமெடி காட்சிகளும் ரசிகர்களை ரசிக்க வைத்தது. மேலும், இளையராஜா அருமையான இசையை இப்படத்திற்காக கொடுத்திருந்தார்.

அதிலும் ‘அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே’ பாடல் விஜயகாந்துக்காகவே அவர் பாடியது போல இருந்தது. விஜயகாந்த் மரணமடைந்த போது அவரின் இறுதி ஊர்வலத்தை ஒளிபரப்பியபோது இந்த பாடல்களைத்தான் அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

இந்நிலையில், இந்த படம் உருவானது பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய ஆர்.வி.உதயகுமார் ‘ இந்த படம் பற்றி நான் பேசியது இப்ராஹிம் ராவுத்தரிடம்தான். முழுக்கதையை சொல்ல மாட்டேன். ஹீரோ துண்டை தோலில் போட்டால் பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்வார். இடுப்பில் கட்டினால் கோவிலுக்கு போவார். துண்டை எடுத்து கீழே வைத்தால் அடி வெளுப்பார். ஊரே வணங்கும் ஒருவன் ஊரின் முன் தலை குனிந்து வாழும் நிலை வரும். இதுதான் கதை’ என்றேன்.

விஜயகாந்த் அப்போது ஆக்‌ஷன் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். எனவே, அவருக்கு இந்த கதை செட் ஆகுமா என இப்ராஹிம் ராவுத்தர் தயங்கினேன். ஆனால், நான் சொன்ன லைனை கேட்டதும் உடனே சம்மதம் சொன்னார். அப்படித்தான் சின்ன கவுண்டர் படம் உருவானது’ என அவர் கூறினார்.
 

Leave a Reply